ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக 5 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதில், 12 கிராமங்கள் முற்றிலுமாக அழிந்து விட்டன. 2,000-க்கும் அதிகமானோர் பலியானதாக தாலிபான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. மேலும், கடந்த 2 தசாப்தங்களில் நாட்டைத் தாக்கிய மிகமோசமான நிலநடுக்கம் இது என்றும் தெரிவித்திருக்கிறது.
ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கு பகுதியான ஹெராத் நகருக்கு வடமேற்கே 40 கி.மீ. தொலைவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவானதான இந்த நிலநடுக்கத்தின் தொடர்ச்சியாக அடுத்தடுத்து தொடர்ச்சியான 5 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இந்த நிலநடுக்கத்தால் ஜிண்டா ஜன் மற்றும் கோரியான் மாவட்டங்களில் 12 கிராமங்கள் முற்றிலும் அழிந்து விட்டன.
ஹெராத் பகுதியில் பல இடங்களில் கட்டடங்கள் குலுங்கியுள்ளன. சுவர்களிலும் விரிசல்கள் விழுந்துள்ளன. நிலநடுக்கம் காரணமாக உயரமான கட்டடங்களில் இருந்து ஏராளமானோர் வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர். பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி 2-வது நாளான இன்று தொடர்ந்து நடந்தது. மீட்பு பணியின்போது சடலங்களாக வந்து கொண்டிருப்பதாக பேரிடர் மீட்புக் குழுவினர் தெரிவித்திருக்கின்றனர்.
இந்த நிலையில், நிலநடுக்கத்துக்கு இதுவரை 2,000 பேர் பலியாகி இருப்பதாக தலிபான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. மேலும், 1000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது. இதுகுறித்து தாலிபான் அரசின் செய்தித் தொடர்பாளர் அப்துல் வாஹித் ராயன் கூறுகையில், “ஹெராத் நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை முதலில் அறிவிக்கப்பட்டதை விட அதிகமாக உள்ளது. இந்த நிலநடுக்கத்தில் நேற்று வரை 320-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருந்த நிலையில், தற்போது 2,060 பேர் பலியாகி இருக்கிறார்கள். சுமார் 12 கிராமங்கள் முற்றிலுமாக அழிந்து விட்டன. இடிபாடுகளில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சிக்கி இருக்கிறார்கள்” என்றார்.
அதேபோல, பேரிடர் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் முகமது அப்துல்லா ஜான் கூறுகையில், “ஹெராத் மாகாணத்தில் உள்ள ஜெண்டா ஜான் மாவட்டத்தில் உள்ள 4 கிராமங்கள் நிலநடுக்கம் மற்றும் அதன் பிறகு ஏற்பட்ட அதிர்வுகளின் தாக்கத்தை சந்தித்துள்ளன. இந்த நிலநடுக்கத்தின் மையம் ஹெராத் நகருக்கு வடமேற்கே 40 கிலோமீட்டர் (25 மைல்) தொலைவில் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து 6.3, 5.9 மற்றும் 5.5 ரிக்டர் அளவுள்ள 3 மிக வலுவான பின் அதிர்வுகளும், குறைந்த அதிர்வுகளும் ஏற்பட்டன” என்றார்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஜெண்டா ஜன் நகரில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல 12 ஆம்புலன்ஸ்களை உலக சுகாதார அமைப்பு அனுப்பி இருக்கிறது. இது குறித்து உலக சுகாதார அமைப்பு தனது எக்ஸ் சமூக வலைதள பதிவில், “ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் குறித்த தகவல்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக உலக சுகாதார அமைப்பின் குழுவினர் ஆஸ்பத்திரிகளுக்கு விரைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள்” என்று கூறப்பட்டு உள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஆட்சி நடத்தி வரும் தலிபான்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்து சென்று நிவாரண பணிகளை மேற்கொள்ளுமாறு உள்ளூர் அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று கூறியிருக்கிறது. “நம்முடைய பாதிக்கப்பட்ட சகோதரர்களுக்கு சாத்தியமான ஒத்துழைப்பையும் உதவியையும் வழங்குமாறு நாங்கள் எங்கள் பணக்கார தோழர்களைக் கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறது.
அதேபோல, தலிபான்களால் நியமிக்கப்பட்ட பொருளாதார விவகாரங்களுக்கான துணைப் பிரதமர் அப்துல் கானி பரதார், ஹெராத் மற்றும் பத்கிஸில் இறந்தவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் தனது இரங்கலைத் தெரிவித்திருக்கிறார். மேலும், காயமடைந்தவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவும், வீடற்றவர்களுக்கு தங்குமிடம் வழங்கவும், உயிர் பிழைத்தவர்களுக்கு உணவு வழங்கவும், பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விரைவில் அடையுமாறு தலிபான் உள்ளூர் அமைப்புகளை வலியுறுத்தி இருக்கிறார். மேலும், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மக்களை மீட்க பாதுகாப்பு ஏஜென்ஸிகள் தங்களின் அனைத்து வளங்களையும் வசதிகளையும் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.
ஆப்கானிஸ்தானுக்கான ஜப்பான் தூதர் தகாஷி ஒகாடா, தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் இரங்கலைத் தெரிவித்திருக்கிறார். “ஹெராட் மாகாணத்தில் நிலநடுக்கம் பற்றிய செய்தியை அறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்” என்று கூறியிருக்கிறார்.
ஹெராத் நகரவாசி அப்துல் ஷகோர் சமாதி கூறுகையில், “நண்பகலில் குறைந்தது 5 வலுவான நிலநடுக்கங்கள் நகரத்தைத் தாக்கின. நானும் எனது குடும்பத்தினரும் எங்கள் வீட்டிற்குள் இருந்தோம். நிலநடுக்கத்தை உணர்ந்தேன். உடனே எனது குடும்பத்தினர் கூச்சலிட்டு வீட்டை விட்டு வெளியே ஓடினார்கள். அனைத்து மக்களும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். மீண்டும் நிலநடுக்கங்கள் ஏற்படுமோ என்கிற அச்சமும் நிலவுகிறது” என்றார்.
ஹெராத் நகரில் தொலைபேசி இணைப்புகள் செயலிழந்திருப்பதால், பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து விவரங்களைப் பெறுவது கடினமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம், நூற்றுக்கணக்கான மக்கள் ஹெராத் நகரில் வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு வெளியே தெருக்களில் இருப்பதை சமூக ஊடகங்களில் காணொளிகள் காட்டுகின்றன. இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தான் மாகாணங்களான ஃபரா மற்றும் பட்கிஸ் ஆகிய இடங்களிலும் உணரப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.