ஒரு நாட்டின் முப்படைகளில் மிகவும் முக்கியமானது விமானப்படை. 1932 -ம் ஆண்டு அக்டோபர் 8 -ம் தேதி வெறும் 25 வீரர்களைக் கொண்டு இந்திய விமானப்படை உருவாக்கப்பட்டது. விமானப் படை உருவான தினம் இன்று. அதுவும், 91-வது இந்திய விமானப்படை தினமாகும்.
இந்திய விமானப்படை பங்கெடுத்த முதல் போர், இந்தியாவுக்கானது என நீங்கள் நினைத்தால் ஏமாந்து போவீர்கள். ஆம், 2-ம் உலகப்போரின்போது நேச நாட்டுப் படைகளுக்காக இங்கிலாந்து சார்பில் பங்கேற்றது. அதன் சிறப்பான செயல்பாடுகளால், ராயல் இந்தியன் ஏர் போர்ஸ் என்ற கௌரவம் வழங்கப்பட்டது.
1950-ம் ஆண்டு, இந்தியா குடியரசு நாடாக மாறிய பின்னர் `ராயல்’ என்ற வார்த்தை நீக்கப்பட்டு `இந்திய விமானப்படை’ என்று பெயர் மாற்றப்பட்டது.
1950-ம் ஆண்டிலிருந்து தற்போது வரை, பாகிஸ்தானுடன் 4, சீனாவுடன் ஒன்று, ஆபரேஷன் விஜய், ஆபரேஷன் மேக்தூத், ஆபரேஷன் காக்டஸ், ஆபரேஷன் பூமாலை என பல வெற்றிகரமான வான்வெளி ஆபரேஷன்களை நடத்தியுள்ளது.
உலகில் அமெரிக்கா, சீனா, ரஷ்யாவுக்கு அடுத்து இந்திய விமானப்படை 4-வது வலிமையான விமானப்படையாக உள்ளது. போர் விமானங்கள், போக்குவரத்து விமானங்கள், ஹெலிகாப்டர்கள் என சுமார் 1,400 விமானங்கள் இந்திய விமானப்படையின் வசம் உள்ளன.
ரஃபேல், மிராஜ் 2000, மிக 21, மிக 27, மிக 29, ஜாகுவார், சுகோய் 30 உள்ளிட்ட போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் ஜொலிக்கின்றன. மொத்தம் 1,70,000-க்கும் மேற்பட்டோர் இந்திய விமானப் படையில் நாட்டிற்காக தங்களை அர்பணித்து வருகின்றனர்.