2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தங்களுடைய முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது.
12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி தங்களுக்கு சொந்த மண்ணில் உலகக் கோப்பைப் போட்டிகளை விளையாடுகிறது. இதில் இந்திய அணி வெற்றியுடன் தொடரைத் தொடங்குமா என்று இரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
காரணம் ஆஸ்திரேலியாப் போன்ற ஐந்து முறை சாம்பியன் அணியை வீழ்த்தினால் அது இந்தியாவின் உத்வேகத்தை கடுமையாக உயர்த்தும். அதேவேளையில் தோல்வி என்பது இந்திய அணியின் பயணத்திற்கு சறுக்கலை ஏற்படுத்தும். இதனால் மிகவும் நெருக்கடியான கட்டத்தில் இன்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது.
இந்த நிலையில் இந்திய அணி பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம். தொடக்க வீரராக கில் விளையாடுவது குறித்துப் போட்டிக்கு முன்பே முடிவு எடுக்கப்படும் என ரோகித் சர்மா கூறியுள்ளார். டெங்கு போன்ற நோய் வந்த பிறகு அவர் உடல் அளவில் சோர்வாக இருப்பார் என்பதால் நாளை ஆட்டத்தில் அவர் பங்கு பெறுவது சந்தேகமே.
இதனால் அவருக்கு பதில் இஷான் கிஷன் தொடக்க வீரராக 100% களமிறங்க வாய்ப்பு இருக்கிறது. இதே போல் நாளை ஆட்டத்தில் சூரியகுமார் யாதவுக்கு வாய்ப்பு கிடைக்குமா இல்லை, ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு மத்தியில் இருக்கிறது. ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதால் ஸ்ரேயாஸ்க்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிகிறது.
இதேபோன்று நடுவரிசையில் விராட் கோலி, ஸ்ரேயாஸ், ஹர்திக் பாண்டியா ஜடேஜா போன்ற வீரர்கள் இடம் பெறுவார்கள். சென்னை என்றாலே சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம் தான் இருக்கும் என்பது ஐதீகம்.
அதன்படி அஸ்வின் ,குல்தீப் யாதவ், ஜடேஜா என்ற மூன்று சுழல் பந்துவீச்சாளர்களுடன் இந்திய அணி விளையாடலாம். மேலும் வேகப்பந்துவீச்சாளர்கள் பும்ரா மற்றும் முகமது சிராஜ்க்கு தான் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.