தமிழகத்தின் வட மாவட்டங்களின் ஜீவ நதியாகப் போற்றப்படும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட எல்லீஸ் மற்றும் தளவானூர் தடுப்பணை சீரமைப்பு செய்யாததால், ஆற்றில் வரும் தண்ணீர் அப்படியே கடலில் கலந்து வீணாகிறது.
தமிழகத்தின் வட மாவட்டங்களின் ஜீவ நதியாகப் போற்றப்படுவது தென்பெண்ணை ஆறு. கடந்த 1950 -ம் ஆண்டு திரு வெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஏனாதி மங்கலம் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது எல்லீஸ் தடுப்பணை. இது 70 ஆண்டுகள் பழமையான தடுப்பணையாகும்.
இந்த எல்லீஸ் அணைக்கட்டின் வலதுபுறம் உள்ள 4 மதகுகளும் கடந்த 2021-ம் ஆண்டு பெய்த கனமழை மற்றும் தென்பெண்ணை ஆற்றில் மழை வெள்ளம் காரணமாக உடைந்தது.
தற்போது, பெய்து வரும் தொடர் மழை காரணமாகவும், சாத்தனூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட நீர் ஆற்றில் அதிகமாக வரும் தண்ணீர் ஆற்றில் சம நிலையில் செல்லவில்லை. இதனால், ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த எல்லீஸ் தடுப்பணை உடைந்து இரண்டரை வருடங்கள் ஆன நிலையில், சீரமைக்கப்படாமல் உள்ளது.
இதேபோல், தென்பெண்ணை ஆற்றில் கடந்த 2019 -ம் ஆண்டு தென்பெண்ணை ஆற்றில் ரூ.25 கோடி மதிப்பில் தளவானூர் அணை கட்டப்பட்டது. இந்த அணை, கட்டப்பட்டு ஒரே ஆண்டில் உடைந்தது. அணையின் ஷட்டர்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால், அணையை வெடி வைத்துத் தகர்த்தனர்.
தேசமடைந்த இந்த இரண்டு அணைகளையும் சீரமைப்பு செய்யாததால், ஆற்றில் வரும் தண்ணீர் அப்படியே கடலில் போய் கலக்கிறது. விவசாயத்திற்கும், பொது மக்களின் குடிநீர்த் தேவைக்கும் பயன்பட வேண்டிய தண்ணீர் வீணாகக் கடலில் போய் கலப்பதாக அப்பகுதி பொது மக்களும், விவசாயிகளும் குற்றம் சாட்டுகின்றனர்.