உத்தராகண்ட் மாநிலத்தில் ரூ.4,194 கோடியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி வரும் 12-ம் தேதி தொடங்கி வைக்கவுள்ளார்.
உத்தராகண்ட் மாநிலத்துக்கு பிரதமர் மோடி வரும் 12-ம் தேதி 2 நாள் பயணம் மேற்கொள்கிறார். உத்தராகண்ட் மாநிலம் அல்மோராவில் அமைந்துள்ள ஜாகேஷ்வர் தாம் பகுதியில் இருந்து தனது பயணத்தை பிரதமர் மோடி தொடங்குகிறார்.
ஜாகேஷ்வர் தாம் கோயில் கடல் மட்டத்திலிருந்து 6,200அடி உயரத்தில் அமைந்துள்ளபுண்ணியத் தலமாகும். பதித் பாவன் ஜடகங்கையின் கரையில் கோயில் அமைந்துள்ளது.
சிவனும், சப்தரிஷிகளும் தவம் செய்த இடமாக இதுகருதப்படுகிறது. அக்டோபர்12-ல் இந்த இடத்துக்கு வரும்பிரதமர் மோடி அங்கு சில நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
இப்பகுதியின் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் பல அறிவிப்புகளை அவர் வெளியிடுகிறார்.
பின்னர் பிரதமர் அங்கிருந்து பித்தோரகர் பகுதிக்குச் செல்கிறார். அங்கு ரூ.4,194 கோடியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார். மேலும் சில திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.
உத்தராகண்ட் மாநில சுற்றுலா மேம்பாட்டுக்காக மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.
பன்முகத்தன்மை கொண்ட நாட்டின் தொலைதூரபகுதிகளை ஆராய்வதற்கு ஏற்ப அவர் பல முன்னெடுப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருவதற்கு சான்றாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.