சிக்கிம் மாநிலத்தில் மேகவெடிப்பு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்திருக்கிறது. மேலும், வெள்ளத்தில் சிக்கியிருந்த 56 பேர் கயிறு மூலம் பத்திரமாக மீட்கப்பட்டதாக இந்தோ திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை தெரிவித்திருக்கிறது.
வடகிழக்கு மாநிலமான சிக்கிம்மில் கடந்த 2 மற்றும் 3-ம் தேதிகளில் மழை பெய்தது. இந்த சூழலில், 3-ம் தேதி நள்ளிரவு லாச்சென் பள்ளத்தாக்கில் திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டது. இதனால், 100 மி.மீ. அளவுக்கு பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக லோனாக் ஏரியின் கரை உடைந்து, டீஸ்டா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இதில், கரையோரம் இருந்த ஏராளமான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. மேலும், டீஸ்டா நதியில் கரைபுரண்டு ஓடிய தண்ணீரால், சுங்தாங் அணை நிரம்பி உடையும் நிலை ஏற்பட்டது. எனவே, அணை திறந்து விடப்பட்டது. இந்த காட்டாற்று வெள்ளத்தில் மங்கன், கேங்டாக், நாம்சி, பாக்யாலங் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
மேலும், 23 ராணுவ வீரர்கள் உட்பட 100-க்கும் அதிகமானோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இந்த வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், வெள்ளத்தில் பாதை அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அந்த இடத்தில் சிக்கித் தவித்த 56 பேர் ரோப் கயிறு மூலம் மீட்கப்பட்டனர். இத்தகவலை இந்தோ திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்திருக்கிறார்கள்.
மேலும், திடீர் வெள்ளத்தால் மாநிலத்தின் 4 மாவட்டங்களில் 41,870 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்திருக்கிறது.