தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் நாளை தொடங்கி நடைபெற உள்ளது.
சென்னை தலைமைச் செயகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் நாளை காலை 10 மணிக்குத் தமிழக சட்டப்பேரவை கூட்டம் கூடுகிறது. இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் எத்தனை நாள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக் கூட்டம் நடத்தி முடிவு செய்யப்படும்.
பரபரப்பான அரசியல் சூழலில் சட்டப்பேரவைக் கூடவுள்ள நிலையில், சம வேலைக்குச் சம ஊதியம் கோரி போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது, தமிழகம் – கர்நாடகா இடையே நடைபெறும் காவிரி மோதல் விவகாரம், சுகாதாரத்துறையில் நிகழ்ந்த குளறுபடிகள், மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் உள்ள குறைகள் மற்றும் குளறுபடிகள், சுமார் 70லட்சம் மகளிருக்கு உரிமைத் தொகை கிடைக்காதது குறித்தும், அன்றாடம் நிகழும் கொலை, கொள்ளை, போதைப் பொருட்கள் விற்பனை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக, தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றாதது குறித்தும், இலாகா இல்லாத அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி குறித்தும், சட்டப் பேரவையில் பாஜக உள்ளிட்ட கட்சிகள் புயலைக் கிளப்பத் திட்டமிட்டுள்ளன.
இதனிடையே ஓ.பன்னீர் செல்வத்துக்கு பேரவையில் எங்கு இருக்கை ஒதுக்கப்படும் என்பது குறித்தும், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரமும் குறித்து பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.