இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட சைபர் தாக்குதல்களை எதிர்கொள்கிறது. எனினும், செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சைபர் குற்றவாளிகளால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள முடியும் என்று தெரிவித்திருக்கிறார்.
கேரள மாநிலம் கொச்சியில் சைபர் தாக்குதல் தொடர்பான 2 நாள் சர்வதேச மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டை கேரள காவல்துறையும், தகவல் பாதுகாப்பு ஆராய்ச்சி சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. இதன் நிறைவு அமர்வில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ தலைவர் சோம்நாத் கலந்துகொண்டு பேசுகையில், “அதிநவீன மென்பொருள் மற்றும் சிப்பைப் பயன்படுத்தும் ராக்கெட் தொழில்நுட்பத்தில் சைபர் தாக்குதல்களின் சாத்தியம் அதிகம். இத்தகைய தாக்குதல்களை எதிர்கொள்ள ஒரு வலுவான சைபர் செக்யூரிட்டி நெட்வொர்க்கை இந்த அமைப்பு கொண்டுள்ளது.
மென்பொருளைத் தவிர, ராக்கெட்டுகளுக்குள் இருக்கும் ஹார்டுவேர் சிப்களின் பாதுகாப்பை மையமாகக் கொண்டு பல்வேறு சோதனைகளையும் இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது. ஏற்கெனவே ஒரு செயற்கைக்கோளைக் கண்காணிக்கும் முறையாக இருந்த மென்பொருள், தற்போது ஒரே நேரத்தில் பல செயற்கைக்கோள்களை கண்காணிக்கும் முறைக்கு மாறியிருக்கிறது. இது இத்துறையின் வளர்ச்சியைக் குறிக்கிறது. இதனால்தான், கொரோனா சமயத்தி, தொழில்நுட்பத்தின் வெற்றியைக் காட்டும் தொலைதூர இடத்திலிருந்து விண்ணில் செலுத்த முடிந்தது.
மேலும், இவை தவிர சாமானியர்களின் அன்றாட வாழ்க்கைக்கு உதவும் செயற்கைக்கோள்களும் உள்ளன. இவை அனைத்தும் பல்வேறு வகையான மென்பொருள்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இவை அனைத்தையும் பாதுகாக்க சைபர் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. மேம்பட்ட தொழில்நுட்பம் என்பது ஒரு வரம். அதேசமயம் ஏராளமான அச்சுறுத்தல்களும் இருக்கின்றன. செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சைபர் குற்றவாளிகளால் ஏற்படும் சவால்களை, அதே தொழில்நுட்பத்துடன் எதிர்கொள்ள முடியும். இதற்கான ஆராய்ச்சியும் கடின உழைப்பும் இருக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.