நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களில் உள்ள பதிவாளர் அலுவலகங்கள், 13 மாநிலங்களின்1,851 விவசாய, ஊரக வளர்ச்சி வங்கிகளை கணினிமயமாக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைல், மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான அமித் ஷாவின் வழிகாட்டுதலிலும், நாட்டின் அனைத்து கூட்டுறவுச் சங்கங்களையும் வலுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில், அனைத்து 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களின் பதிவாளர் அலுவலகங்கள் மற்றும் 13 மாநிலங்களில் செயல்படும் 1,851 வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளின் பதிவாளர் அலுவலகங்களை கணினிமயமாக்கவும் அதிகாரமளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
13 மாநிலங்களில் உள்ள 1,851 வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளைத் தேசிய ஒருங்கிணைந்த மென்பொருள் மூலம் கணினிமயமாக்கவும், அனைத்து மாநிலங்களிலும் கூட்டுறவு பதிவாளர் அலுவலகங்களை கணினிமயமாக்கவும் மத்திய நிதியுதவி திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கான மொத்த மதிப்பீடு ரூ.225.09 கோடியாகும். மேலும், இந்த திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம் கூட்டுறவுத் துறைகள் மற்றும் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளின் சேவைகளை மக்கள் விரைவாகப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.