ஜப்பானில் கடலோரப் பகுதிகளுக்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் ஏற்பட்ட லேசான அதிர்வுகளைத் தொடர்ந்து இன்று அந்த எச்சரிக்கை வெளியானது.
பசிபிக் பெருங்கடலில் உள்ள இஸு தீவுகளில் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது, ஹச்சிஜோஜிமா (Hachijojima) தீவில் சுமார் 60 செண்டிமீட்டர் உயரம் வரை அலைகள் எழுந்துள்ளது.
மேற்கு, தெற்குப் பகுதிகளில் 20 முதல் 40 செண்டிமீட்டர் உயரம் அலைகள் எழுந்ததாக ஜப்பான் வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது.
இதுவரை சேதம் குறித்தத் தகவல்கள் எதுவும் வரவில்லை. தோக்கியோவின் அருகிலுள்ள தாத்தேயாமா (Tateyama) நகரில் குடியிருப்பாளர்களை வீடுகளைவிட்டு வெளியேறும்படி அறிவுறுத்தப் பட்டுள்ளது.மேலும் கடற்கரைக்குச் செல்வதைத் தவிர்க்கும்படி அதிகாரிகள் ஆலோசனை கூறியுள்ளனர்.
ஜப்பான் வானிலை ஆய்வு மையம் , திங்கள்கிழமை காலை 5:25 மணிக்கு டோரிஷிமா தீவுக்கு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து இந்த அறிவுரைகளை வழங்கப்பட்டது.
யுனைடெட் ஸ்டேட்ஸ் புவியியல் ஆய்வு மையத்தின் புள்ளிவிவரங்களின்படி, இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவாகியுள்ளது.