இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பின்னணியில் ஈரான், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் இருப்பதாகவும், அந்நாடுகள் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆயுத உதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்திருக்கலாம் என்றும் உளவுத்துறை மற்றும் வெளியுறவுத்துறை நிபுணர்கள் சந்தேகத்தை எழுப்பி இருக்கிறார்கள்.
இஸ்ரேல் மீது காஸாவின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த சனிக்கிழமை காலை திடீரென ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தினர். மேலும், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வான் வழியாகவும், கடல் வழியாகவும், தரை வழியாகவும் இஸ்ரேலுக்குள் ஊடுருவி நேரடித் தாக்குதலிலும் ஈடுபட்டனர். இந்த வன்முறையில் 700-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியாகி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இதுதவிர, ஏராளமான இஸ்ரேலியர்களையும், இஸ்ரேல் இராணுவத்தினரையும் ஹமாஸ் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு, இஸ்ரேலின் இரும்புக் கவசம் எனப்படும் “அயர்ன் டோம்” என்கிற பாதுகாப்புக் கருவியையும் ஹமாஸ் தீவிரவாதிகள் செயலிழக்கச் செய்திருக்கின்றனர். இதுதான் உளவுத்துறை மற்றும் வெளியுறவுத்துறை நிபுணர்கள் மத்தியில் வலுவான சந்தேகத்தைக் கிளப்பி இருக்கிறது.
அதாவது, காஸாவின் ஹமாஸ் தீவிரவாதிகள் பல மாதங்களாக பக்காவாகத் திட்டமிட்டு, மிகவும் நிதானமாக இத்தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள். முதலில் காஸா முனையின் மலைக்குன்றில் பல்லாயிரக்கணக்கான ஏவுகணைகளைக் கொண்டு வந்த குவித்திருக்கிறார்கள். இவ்வளவு ஏவுகணைகள் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஒரே நாளில் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. ஆகவே, அணு ஆயுதங்களை ஏராளமாகக் குவித்து வைத்திருக்கும் ஏதோ ஒரு நாடுதான் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு உதவி இருக்க வேண்டும்.
அந்த வகையில், ஈரான் நாடு ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு பகிரங்கமாகவே பயிற்சி அளித்திருக்கிறது. தவிர, இத்தாக்குதலை “பெருமைமிகு தாக்குதல்” என்று பாராட்டவும் செய்திருக்கிறது. ஆகவே, தீவிரவாத பயிற்சி அளித்ததோடு, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஏவுகணை உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களையும் வழங்கி உதவி இருக்க வேண்டும். அதேபோல, ஈரான் நாட்டுக்கும் ரஷ்யாவுக்கும் மிகநெருங்கிய நட்புறவு உண்டு. ஆகவே, ஈரான் மூலம் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ரஷ்யா ஆயுதங்களை வழங்கி இருக்கலாம்.
இது ஒருபுறம் இருக்க, இரும்புக் கவசம் எனப்படும் “அயர்ன் டோம்” கருவியையும் ஹமாஸ் தீவிரவாதிகள் செயலிழக்கச் செய்திருக்கிறார்கள். இந்த “அயர்ன் டோம்” பாதுகாப்பு முறை என்பது உலகளவில் புகழ்பெற்றது. உலகிலேயே மிகவும் பாதுகாப்பான அணு ஆயுதத் தடுப்பு முறை இதுதான். கடந்த 2007-ம் ஆண்டு காஸா மலைக்குன்று பகுதியை ஹமாஸ் தீவிரவாத அமைப்பினர் கைப்பற்றியபோது, “அயர்ன் டோம்” முறையை இஸ்ரேல் கட்டமைத்தது.
இஸ்ரேலின் ரஃபேல் போர் விமான நிறுவனமும், ஏரோ ஸ்பேஸ் நிறுவனமும் இணைந்து இந்த பாதுகாப்புக் கவச முறையை உருவாக்கின. ஒரே நேரத்தில் பல முனைகளில் இருந்து தாக்குதல் நடந்தாலும் இந்த அயர்ன் டோமால் சமாளிக்க முடியும். ஏவுகணைகள் மட்டுமல்லாது, விமானம், ட்ரோன் எனப்படும் சிறிய விமானங்களையும் தாக்க முடியும். வெறும் 90 கிலோ எடை கொண்ட இந்த அயர்ன் டோமை எந்த இடத்துக்கும் சுலபமாக எடுத்துச் செல்ல முடியும்.
இந்த “அயர்ன் டோம்” 3 முக்கிய அம்சங்களை உடையது. முதலில், ரேடார் வாயிலாக எதிரி நாட்டு ஏவுகணை அடையாளம் காணும். பின்னர், அதிலுள்ள கண்காணிப்பு முறை செயல்பட்டு, தாக்குதலுக்கு தயாராகும். பிறகு, இலக்கை நோக்கி எதிர்தாக்குதல் நடத்தும் ஏவுகணையை செலுத்தும். அது துல்லியமாக எதிரி ஏவுகணையை தாக்கி நடுவழியிலேயே அழித்து விடும். எந்த நேரத்திலும், எந்த பருவநிலையிலும், எங்கும் இதை பயன்படுத்த முடியும்.
இந்த “அயர்ன் டோம்” இதுவரை 2,400-க்கும் மேற்பட்ட ஏவுகணைத் தாக்குதலை முறியடித்திருக்கிறது. அப்படிப்பட்ட இந்த பாதுகாப்புக் கவசம் தற்போது தகர்க்கப்பட்டிருக்கிறது. இந்த பாதுகாப்புக் கவச முறையை எப்படிக் கையாள்வது என்பது ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகவே, இதற்கான தொழில்நுட்ப உதவிகளை சீனாதான் வழங்கி இருக்க வேண்டும். காரணம், சீனாவுக்கும் இஸ்ரேலுக்கும் ஆகாது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்தத்தில் ஈரான், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் உதவியுடனேயே ஹமாஸ் தீவிரவாதிகள் இத்தாக்குதலில் ஈடுபட்டிருக்கி வேண்டும் என்பது தெள்ளத்தெளிவாகிறது.