2023-ம், ஆண்டில், முதல் சூரிய கிரகணம் கடந்த ஏப்ரல் மாதம் 20 -ம் தேதி நடைபெற்றது. தற்போது, 2-வது சூரிய கிரகணம், வரும் 14 -ம் தேதி நடைபெற உள்ளது.
சோபகிருது வருஷம் புரட்டாசி மாதம் 27 -ம் நாள் அதாவது வரும் 14 -ம் தேதி சனிக்கிழமை அன்று சித்திரை நட்சத்திரத்தில் கேது கிருத சூரிய கிரகணம் நடைபெற உள்ளது. இது இரவு 8.33 -க்கு தொடங்கி 11.29 வரை நடைபெறுகிறது. இந்த கிரகணம், அமெரிக்கா, ஆப்ரிக்கா நாடுகளில் மட்டுமே தெரியும். இந்தியாவில் தெரியாது என்பதால், நமக்குக் கிரகண தோஷம் கிடையாது. கர்ப்பிணிப் பெண்கள் உள்பட யாரும் பரிகாரம் செய்யத் தேவையில்லை.
ஆனால், சோபகிருது வருஷம் ஐப்பசி மாதம் 11 -ம் நாள், அதாவது வரும் 28 -ம் தேதி சனிக்கிழமை அசுபதி நட்சத்திரத்தில் ராகு கிருத சந்திர கிரகணம் நடைபெறுகிறது. இது இரவு 1.03 -க்கு தொடங்கி 2.23 வரை நடைபெறுகிறது. இந்த கிரகணம் நமது நாட்டில் தெரியும் என்பதால் கிரகண தோஷம் உண்டு. இதனால், ரேவதி, அசுபதி, பரணி, மகம், மூலம் நட்சத்திரக்காரர்கள் கிரகண சாந்தி செய்து கொள்ள வேண்டும்.
குறிப்பாக, கர்ப்பிணிப் பெண்கள் அன்று மாலையே உணவருந்தி ஓய்வில் இருக்க வேண்டும். அன்றைய தினம், அதாவது நாள் முழுக்க கத்தி, அரிவாள்மனை, கத்திரி கொண்டு எதையும் வெட்டவோ, நறுக்கவோ கூடாது.
பொதுவாக கிரகணங்கள் நடைபெறும்போது, கோவில் நடை சாத்தப்படும். கிரகணத்திற்கு பின்னர், பரிகாரங்கள் செய்த பின்னர் கோவில் நடை திறக்கப்படும். அப்போது, கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்யலாம்.