இஸ்ரேலில் நடந்த இசை நிகழ்ச்சியில் புகுந்த ஹமாஸ் தீவிரவாதிகள், குழுமியிருந்த கூட்டத்தினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால் உற்சாகமாக நடந்துகொண்டிருந்த இசை நிகழ்ச்சி, கண் இமைக்கும் நேரத்தில் துக்க நிகழ்ச்சியாக மாறிய கொடூரம் அரங்கேறி இருக்கிறது.
இஸ்ரேல் மீது காஸாவின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த சனிக்கிழமை காலை திடீரென ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் இஸ்ரேல் நிலைகுலைந்து போயிருந்த நேரத்தில், வான், கடல், தரை மார்க்கமாக அந்நாட்டுக்குள் ஊடுருவிய ஹமாஸ் தீவிரவாதிகள், கண்ணில்பட்ட மக்களை எல்லாம் சுட்டுத்தள்ளி கொன்று குவித்தனர். அன்றையதினம் இஸ்ரேல் நாட்டில் ஜெவிஷ் விடுமுறை தினம் கொண்டாடப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஜெவிஷ் விடுமுறையை முன்னிட்டு, காஸா-இஸ்ரேல் எல்லையில் உள்ள கிராமப் பகுதியில் இசை விழா நடைபெற்றது. இதில், இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். தவிர, வெளிநாடுகளைச் சேர்ந்த இசைக் கலைஞர்களும் பங்கேற்றனர். இஸ்ரேலுக்குள் ஊடுருவிய காஸா தீவிரவாதிகள், திடீரென இந்த இசை நிகழ்ச்சிக்குள் புகுந்து அதிரடித் தாக்குதலில் ஈடுபட்டனர்.
திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால் திக்குமுக்காடிப்போன இளைஞர்கள் அங்கிருந்து தப்பியோட முயற்சித்தனர். இதனால், அங்கு பெரும் கூச்சல் குழப்பம் நிலவியது. இசை நிகழ்ச்சி நடந்த அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது. பலரும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த காருக்கு அடியில் பதுங்கிக் கொண்டனர். சுமார் 6 மணி நேரம் எவ்வித சத்தமும் போடாமல் தங்களது உயிரை காப்பாற்றிக் கொண்டனர்.
எனினும், இத்தாக்குதல் காரணமாக அந்த இடத்தில் ஏராளமான இளைஞர்களின் உடல்கள் சிதறிக் கிடந்தன. சுமார் 250 பேரின் உடல்கள் அந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்டதாக இஸ்ரேல் மீட்பு அமைப்பு தெரிவித்திருக்கிறது. எனினும், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்திருக்கிறது. மேலும், இவ்விழாவில் கலந்து கொண்டவர்களில் பலரையும் ஹமாஸ் தீவிரவாதிகள் பிணைக் கைதியாகவும் பிடித்து சென்றிருக்கிறார்கள். எனவே, விழாவில் கலந்து கொண்டு மாயமானவர்களை கண்டுபிடிக்கும்படி விழா அமைப்பாளர்கள் பாதுகாப்புப் படைக்கு வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானவர்களில் இந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.