மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான அருள்மிகு அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.
மத்திய மீன்வளம் கால்டை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் வருகை தந்தனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் முதல் மரியாதை செய்யப்பட்டது. திருக்கோவிலில் அவர்கள் மனம் உருக சுவாமி தரிசனம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, சோழர்களின் முக்கியமான துறைமுக நகரங்களில் ஒன்றான பூம்புகார், கடலூர் மாவட்ட மீன்பிடி துறைமுகம் ஆகியவற்றில் சாகர் பரிக்ரமாவின் 9-வது கட்டத்தின் ஒரு பகுதியாக மகளிர் சுய உதவிக் குழு மற்றும் மீனவ பயனாளிகளுக்கு கிசான் கடன் அட்டை வழங்கி அவர்களின் குறைகளை கேட்டறிந்தனர்.
மேலும், புதுச்சேரி தேங்காய்த்திட்டு கடற்கரை கிராமத்தில் சாகர் பரிக்கிரமா யாத்திரை நடைபெற்றது. இதில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி ஆகியேர் கலந்து கொண்டனர்.
அப்போது, ரூ.53.39 கோடி மதிப்பிலான மீன்பிடி துறைமுக விரிவாக்கம், பெரிய காலப்பேட்டையில் ரூ.20.14 கோடி செலவில் மீன் இறங்குதளம் மற்றும் நல்லவாடியில் ரூ.18.94 கோடி செலவில் மீன் இறங்குதளம் துவக்கி வைத்தனர். மேலும், 2 நபருக்கு ரூ.20 லட்சத்தில் குளிரூட்டப்பட்ட கனரக வாகனம் மானிய விலையில் மற்றும் 1,140 மீனவர்களுக்கு ரூ.3.01 கோடி செலவில் கிசான் கடன் அட்டை ஆகியவற்றை வழங்கினர்.
பயனாளிகள் அனைவரும் பாரதப் பிரதமர் மோடிக்கு தங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.