ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை, இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, அம்மாநிலத்தில் போட்டியிடும் 41 வேட்பாளர்களின் முதல் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி இன்று வெளியிட்டிருக்கிறது.
ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையின் பதவிகாலம் இந்த ஆண்டோடு நிறைவடைகிறது. இம்மாநிலத்தைப் பொறுத்தவரை பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. எனவே, இம்மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியும், எதிர்கட்சியான பா.ஜ.க.வும் கடந்த சில மாதங்களாகவே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான ஆளும் காங்கிரஸ் கட்சியின் மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதால், அம்மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ.க. பகீரத முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது.
இதற்காக, அம்மாநிலத்தில் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அடிக்கல் நாட்டினார். அதேசமயம், ஆட்சியைத் தக்க வைப்பதற்காக காங்கிரஸ் கட்சியும் பல்வேறு யுத்திகளை கையாண்டு வருகிறது. ஆகவே, பா.ஜ.க. மீது பல்வேறு பழிகளை சுமத்தி வருகிறது. இப்படி இரு தரப்பினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ராஜஸ்தான் மாநிலத்துக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையம் ஆலோசித்து வந்தது.
இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 23-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் இன்று காலை அறிவித்திருந்தார். இதையடுத்து, ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தமுள்ள 200 தொகுதிகளில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் 41 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை அக்கட்சித் தலைமை இன்று அறிவித்திருக்கிறது. அதன்படி, அக்கட்சியின் எம்.பி.க்கள் ராஜ்யவர்தந் ரத்தோர், தியா குமாரி ஆகியோர் சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.