இஸ்ரேல் – ஹமாஸ் தீவிரவாதிகள் இடையேயான போரின் காரணமாக, ஆசியா சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
கொரோனா பெருந்தொற்றின் போது உலகப் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டது. கொரோனாவுக்கு தாக்கம் குறைந்த பின் உலக பொருளாதார நிலை சற்று தலை தூக்கிய போது, உக்ரைன் மீது ரஷ்யா ஆக்கிரமிப்பு யுத்தம் தொடங்கியது. இதுவும் உலக பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், மேற்காசிய நாடான இஸ்ரேல் மீது காஸாவின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த சனிக்கிழமை அறிவிக்கப்படாத போரில் ஈடுபட்டனர். ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் ஏராளமான இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். இதனால் ஆத்திரமடைந்த இஸ்ரேல், காஸா மீது ஏவுகணை மற்றும் வான் வழித் தாக்குதலில் ஈடுபட்டது. காஸாவின் முக்கியப் பகுதிகளில் குண்டு மழை பொழிந்தது. தொடர்ந்து, போர் நீடித்து வருகிறது. இரு தரப்பினர் இடையே மோதலில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
முழு உலகிற்கும் மேற்கு ஆசியாவின் பகுதி மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில் உலகின் கச்சா எண்ணெய் தேவையில் மூன்றில் ஒரு பங்கு இப்பகுதியில் இருந்து கிடைக்கிறது. இந்த நிலையில், இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் எதிரொலியாகக் கச்சா எண்ணெய் விலை 5 சதவீதம் அதிகரித்துள்ளது.
அதன்படி, சர்வதேசச் சந்தையில் அக்டோபர் 6-ஆம் தேதி 84.58 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை, இன்று 89 டாலராக உயர்ந்துள்ளது.