நாடு முழுவதும் 355 முக்கிய மையங்களில் 1 லட்சத்து 73 ஆயிரத்து 355 தொழிலக பாதுகாப்புப் படை வீரர்கள் நாள்தோறும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக தொழிலக பாதுகாப்பு படை பிரிவின் தலைவர் சரவணன் தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள நகரிகுப்பத்தில் செயல்பட்டு வரும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை மண்டல பயிற்சி மையத்தில் 11 மாத கால பயிற்சி முடித்த 47 மற்றும் 48 வது படை பிரிவின் பயிற்சி நிறைவு பெற்ற வீரர்களின் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி பயிற்சி மையத்தின் முதல்வர் சாந்தி ஜி ஜெயதேவ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மத்திய தொழில் பாதுகாப்பு படையின் தென்மண்டல தலைவர் சரவணன் கலந்து கொண்டு பயிற்சி நிறைவு செய்த 772 வீரர்களின் அணிவகுப்பை திறந்த ஜீப்பில் சென்று பார்வையிட்டார். பின்னர் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
அதன்பின் பயிற்சி முடித்த வீரர்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து இவ்விழாவில் பேசிய மத்திய தொழில் பாதுகாப்பு படை தென்மண்டல தலைவர் சரவணன், இன்று பயிற்சி நிறைவு செய்தவர்கள் அனைவரும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்கள், துறைமுகங்கள், நாடாளுமன்றம் என முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் பணி நியமனம் செய்யப்பட உள்ளதால், பயிற்சி நிறைவு செய்த வீரர்கள் நாட்டின் பாதுகாப்பையும் முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு சிறப்பாக பணியாற்ற வேண்டும் என வாழ்த்தினார்.
1969 ஆம் ஆண்டு முதல் 355 மையங்களில் 1 லட்சத்து 73 ஆயிரத்து 355 மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவித்தார்.
குறிப்பாக டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் மட்டும் 28 லட்சம் முதல் 30 லட்சம் வரையிலான பயணிகளுக்கு பாதுகாப்பு சேவை செய்து வருகின்றனர் என்றார். அதேபோல் பன்னாட்டு விமான நிலையங்களில் 6 லட்சம் முதல் 7 லட்சம் வரையிலான விமான பயணிகளுக்கு பாதுகாப்பு அளித்து வருவதாக தெரிவித்தார்.