உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இராமர் கோவில் பிரதிஷ்டை விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், அதற்கு முன்பாக அயோத்தியை முதல் சூரிய சக்தி நகரமாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
வருகிற ஜனவரி 22-ஆம் தேதி அயோத்தி இராமர் கோவில் மூலவரான, குழந்தை இராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த வரலாற்று நிகழ்வில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். மேலும், நாடு முழுவதிலும் இருந்து சுமார் 10,000 உயரதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் ‘சூரிய சக்தி ஆற்றல் கொள்கை 2022’ எனும் இலட்சியத் திட்டத்தின் மூலம் நொய்டா மற்றும் 16 நகராட்சிகளைச் சூரிய சக்தி நகரங்களாக உருவாக்கத் திட்டமிடப்பட்டது. அதன்படி, சரயு நதிக்கரையில் சூரிய ஆற்றல் பூங்காவை உருவாக்குதல், சூரிய சக்தியில் இயங்கும் படகுகள் வழங்குதல், சூரிய சக்தியால் இயங்கும் தெரு விளக்குகள் அமைத்தல், சூரிய சக்தியில் இயங்கும் வாகனங்கள், பொது இடங்களில் மொபைல் சார்ஜிங் இடங்கள், நகர மின் மயமாக்கல் போன்ற சூரிய சக்தியில் இயங்கும் வசதிகள் உள்ளிட்டவை இந்த திட்டத்தின் ஒரு பகுதியாகும். சூரிய சக்தியைப் பயன்படுத்தி, அரசு கட்டிடங்கள் மற்றும் வீட்டுத் தேவைகளுக்கான மின்சாரமும் வழங்கப்பட உள்ளது.
சூரிய சக்தி நகரம், 2023-28 எனும் ஐந்தாண்டு திட்டத்தின் ஒரு பகுதியாக, சூரிய சக்தி தெருவிளக்குகள், அரசு கட்டிடங்களில் சூரிய ஆற்றல் தயாரிப்பதற்கான வசதிகளை ஏற்படுத்துதல், சார்ஜிங் நிலையங்களுடன் கூடிய மின்-ரிக்ஷாக்கள், குடிநீர் இயந்திரத்துக்குச் சூரிய சக்தியால் இயங்கும் சுத்திகரிப்பு வசதிகளும் இந்தத் திட்டத்தில் அடங்கும். இந்த பணிகள் முதற்கட்டத்திலேயே முடிக்கப்படும் என்றும், அயோத்தியில் நடந்து வரும் பெரும்பாலான திட்டங்கள் ஜனவரிக்குள் முடிக்கப்படும் என்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை இயக்குநா் சுக்லா கூறியுள்ளார்.
அயோத்தியில் நடைபெற்று வரும் பணிகளை முதல்வா் யோகி ஆதித்யநாத் நேரடியாகக் கண்காணித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சூரிய சக்தி நகரத் திட்டம் மூலம் சரயூ நதிக்கரையில் 40 மெகாவாட் மின் உற்பத்தித் திறன்கொண்ட சூரிய சக்தி பூங்கா அமைக்கப்பட உள்ளது என்றும், 10 மெகாவாட் மின் உற்பத்தி ஜனவரி மாதத்துக்குள் தொடங்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.