உடல் நிலையைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கக்கோரி இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்குவர உள்ளது.
சட்ட விரோத பணப்பரிவர்த்தனை விவகாரத்தில் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14 -ம் தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். அதேசமயம் அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக அவர் முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, தற்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அவசர வழக்காக விசாரிக்கக் கோரி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ முறையீடு செய்தார். ஆனால், இந்த மனு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அறிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவைச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இரண்டு முறை தள்ளுபடி செய்திருந்தது. மேலும், இது அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கு என்பதால், சென்னை உயர் நீதி மன்றம், உச்ச நீதிமன்றத்தை நாடி பரிகாரம் தேடிக் கொள்ளவே அறிவுறுத்த அதிகம் வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அமலாக்கத்துறை கைது செய்துள்ள பலரும், பல்வேறு சிறைச் சாலைகளில் பல மாதங்களாகச் சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.