ஒரு நாள் கிரிக்கெட் உலகக்கோப்பைப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இன்று ஹைதராபாத்தில் விளையாடவுள்ளது.
2023 ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடரில் இன்று பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் ஹைதராபாத் ராஜுவ் காந்தி சர்வதேச மைதானத்தில் விளையாடுகிறது.
பாகிஸ்தான் அணி, முதல் போட்டியில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி வெற்றிப் பெற்றது. நெதர்லாந்து பவுலிங்கை சமாளிக்க முடியாமல் பெரிய ஸ்கோரை பாகில்தான் அணி அடிக்க தவறினாலும் பவுலர்கள் சிறப்பாக பந்து வீசி அணிக்கு வெற்றியைத் தேடி தந்தனர்.
பாகிஸ்தான் அணியில் பேட்டிங்கைக் காட்டிலும் பவுலிங்கில் இருந்த சிக்கல் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் சரியானது. எனவே தற்போது பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் பக்கவாக பாகிஸ்தான் அணி செட்டாகியுள்ளது.
இலங்கை அணி, தென்ஆப்பரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் மோசமான பந்துவீச்சால் 400 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்தது. இதனால் பேட்டிங்கில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாகத் தோல்வியை தழுவியது.
தென்ஆப்பரிக்காவுக்கு எதிரானப் போட்டியில் அனுபவ வீரர் தீக்ஷனாவுக்கு பதிலாக இளம் வீரர் வெல்லலகே பிரதான ஸ்பின்னராகச் சேர்க்கப்பட்டார். ஆனால் அதற்கான பலன் கிடைக்கவில்லை. எனவே இன்றையப் போட்டியில் தீக்ஷனா களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கலாம்.
அந்த வகையில் பேட்டிங்கை காட்டிலும், ஸ்பின் பவுலிங்கை ஆயுதமாக வைத்து பாகிஸ்தான் பேட்டிங்குக்கு அச்சுறுத்தல் தர இலங்கை அணி முயற்சிக்கலாம்.
உலகக் கோப்பைத் தொடருக்கு முன்னர் நடைபெற்ற ஆசியக் கோப்பைத் தொடரில் கடைசி ஓவரில் வெற்றிப் பெற்று இறுதிப்போட்டிக்கு நுழைந்தது இலங்கை. எனவே அங்கு பெற்ற தோல்விக்கு தற்போது பாகிஸ்தான் அணி பழிதீர்க்கும் என எதிர்பார்க்கலாம்.
மேலும் வெற்றி வாய்ப்பு கணக்கெடுப்பில் பாகிஸ்தான் அணிக்கு 66 சதவீதமும், இலங்கை அணிக்கு 34 சதவீதமும் வெற்றிப் பெற வாய்ப்புள்ளதாக இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.