கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பேரிடர் காலத்தில் எம்ஆர்பி தேர்வில் தேர்ச்சி பெற்ற 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் தற்காலிக முறையில் பணியமர்த்தப்பட்டனர். இதில் 3 ஆயிரம் பேர் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். மற்ற 3,290 பேரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனத் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் எம்ஆர்பி செவிலியர்கள் சங்கத்தினர்.
கொரோனா காலத்தில் பணியாற்றிய அனைத்து செவிலியர்களும், திமுக ஆட்சி அமைந்ததும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று, அன்றைய எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார். தொடர் போராட்டம் காரணமாக, 2022 -ம் ஆண்டு மார்ச் மாதம் பணி நிரந்தரம் தொடர்பாக அரசு உறுதி அளித்தது. ஆனால், பணி நிரந்தரம் செய்யவில்லை.
இதனால், 11-ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்தனர். சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும், பெண்கள் என்றும் பாராமல் வலுக்கட்டாயமாகக் கைது செய்து அலைக்கழித்து பல்வேறு மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
காலை 11 மணிக்கு அரசுடன் பேச்சுவார்த்தை என்று கூறிவிட்டு செவிலியர்களைக் கைது செய்வது ஏன், போராட்டத்தை ஒருங்கிணைத்த இணை செயலாளர் விக்னேஷ் எங்கே தீர்வு கிடைக்கும் வரை காலவரையற்ற உண்ணாவிரதம் தொடரும் என்கின்றனர் எம்ஆர்பி செவிலியர்கள் சங்க நிர்வாகிகள்.
கொரோனா காலத்திலும் உயிரைப் பணயம் வைத்து வேலை பார்த்தவர்களுக்கு அரசு கொடுக்கும் பரிசு இதுதானா எனக் கேள்வி எழுப்புகின்றனர் போராட்டக்காரர்கள்.