ஒடிசா மாநிலம் பூரியில் உலகப்புகழ் பெற்ற பூரி ஜெகநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த திருக்கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த திருக்கோவிலில் தற்போது செல்போன் மற்றும் படக்கருவிகள் கொண்டு செல்லவும், படம் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வரும் 2024-ம் ஆண்டு புத்தாண்டான ஜனவரி 1 -ம் தேதி முதல் திருக்கோவிலில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஆண்கள், வெள்ளை பஞ்சா, வேஷ்டி, வெள்ளை குர்தா, பைஜாமா ஆகியவை அணிந்து வரவும், பெண்கள் ரவிக்கையுடன் கூடிய புடவை, துப்பட்டாவுடன் கூடிய பஞ்சாபி உடை, துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் மற்றும் சேலை அணிந்து வரலாம்.
ஆனால், பெர்முடாஸ், டி-ஷர்ட்கள், ஷார்ட்ஸ் போன்ற மேற்கத்திய ஆடைகள் மற்றும் உடல் பாகங்கள் வெளியே தெரியும் வகையில் உள்ள ஆடைகள் அணிந்து வர அனுமதி இல்லை.
திருக்கோவிலுக்கு வரும் சிலர் அநாகரிகமான உடை அணிந்து வருவதால், நிதி துணைக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் திருக்கோவில் நிர்வாக குழு தலைவர் ரஞ்சன் குமார் தாஸ் அறிவித்துள்ளார்.