இந்தியா-தான்சானியா இடையே நட்புறவை வளர்ப்பதிலும், பொருளாதார பேச்சுகளை ஊக்குவிப்பதிலும், பிராந்திய ஒருங்கிணைப்பு மற்றும் பன்முகத்தன்மையில் வெற்றியை அடைவதிலும் முக்கிய பங்கு வகித்ததற்காக தான்சானியாவின் முதல் பெண் அதிபரான டாக்டர் சமியா சுலுஹு ஹசனுக்கு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தால் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்; வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர்; கல்வித்துறை இணையமைச்சர் அன்னபூர்ணா தேவி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய மேதகு டாக்டர் சமியா சுலுஹு ஹசன், தம்மை “இந்தியக் கல்வியின் தயாரிப்பு” என்று கூறிய அவர், இதற்கு ஹைதராபாதில் உள்ள என்.ஐ.ஆர்.டி.யில் தனது ஐ.டி.இ.சி பயிற்சியே காரணம் என்றார். ஒரு வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் தமக்கு வழங்கிய முதல் விருது என்பதால் அவருக்கு வழங்கப்பட்ட உயரிய அங்கீகாரம் இது என்று தெரிவித்தார்.
உலகளாவிய வளரும் நாடுகளின் நோக்கத்திற்கு இந்தியா உண்மையாகவும், விசுவாசமாகவும் உள்ளது. பன்முகத்தன்மையின் முக்கியத்துவத்தை இந்தியா தொடர்ந்து நிலைநிறுத்தி வருகிறது என்பதையும், சந்தையை விட சமூகத்தை மதிப்பதையும் (லாபத்தை விட மக்கள்) அவர் பாராட்டினார். கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியதற்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
55,000 நிறுவனங்கள், 42 மில்லியன் மாணவர்கள் மற்றும் 1.6 மில்லியன் ஆசிரியர்களுடன் இந்தியா ஒரு துடிப்பான உயர் கல்வி சூழலைக் கொண்டுள்ளது என்பதை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் எடுத்துரைத்தார். கல்வி முறைக்கான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை உருவாக்குவதில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் ஜெய்சங்கர், டாக்டர் சமியா சுலுஹு ஹசனுக்கு கல்வி சார்ந்த கௌரவம் வழங்குவது இந்தியாவுடன் அவருக்கு உள்ள நீண்ட கால தொடர்பு மற்றும் நட்பை அங்கீகரிப்பதாகக் குறிப்பிட்டார்.
கல்வியும் திறன் மேம்பாடும் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளின் முக்கிய அம்சங்கள் என்று கூறினார். இந்தியா, தான்சானியா கல்விக்குழுமத் திட்டத்தின் கீழ் 5000-க்கும் அதிகமான தான்சானியா நாட்டினர், ஏற்கனவே இந்தியக் கல்வி நிறுவனங்களில் பயிற்சி பெற்றுள்ளனர் என்று குறிப்பிட்டார்.
தான்சானியாவின் சான்சிபார் முதலாவது வெளிநாட்டு ஐ.ஐ.டி.யை அமைக்க விரும்பிய இடமாகும் என்று கூறினார். இந்த நிறுவனம் முழு ஆப்பிரிக்க கண்டத்திற்கும் தொழில்நுட்ப கல்விக்கான முதன்மை மையமாக மாறும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டார். ஜி 20-ல் ஆப்பிரிக்க ஒன்றியத்தை ஒரு முழு உறுப்பினராகச் சேர்த்தது இந்திய தலைமைத்துவத்தின் மிக உயர்ந்த வெற்றிகளில் ஒன்றாகும் என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வேந்தர் கன்வல் சிபல், துணைவேந்தர் பேராசிரியர் சாந்திஸ்ரீ துலிபுடி பண்டிட், தான்சானியாவைச் சேர்ந்த பிரதிநிதிகள், 15 ஆப்பிரிக்க தூதரகங்களின் தலைவர்கள், பிரமுகர்கள், கல்வியாளர்கள், இந்தியாவில் படிக்கும் தான்சானியா மாணவர்கள் மற்றும் அமைச்சகங்களின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.