ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற இந்திய விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட இந்திய விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுடன் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 10 -ம் தேதி அன்று சந்திப்பார் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, இன்று மாலை 4:30 மணியளவில் புதுடெல்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் மைதானத்தில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட இந்திய விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுடன் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஆர்வமுடன் கலந்துரையாடினார்.
இந்த நிகழ்ச்சியில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற இந்திய அணியின் வீரர்கள், வீராங்கனைகள் அவர்களின் பயிற்சியாளர்கள், இந்திய ஒலிம்பிக் சங்க அதிகாரிகள், தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் பிரதிநிதிகள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய அவர், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கிய விளையாட்டு வீரர்களை, வீராங்கனைகளை வாழ்த்துவதற்கும், எதிர்காலப் போட்டிகளுக்கு ஊக்கப்படுத்துவதற்கும் இது ஒரு நல் வாய்ப்பாக அமைந்துள்ளது எனப் பெருமிதம் தெரிவித்தார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 28 தங்கப் பதக்கங்கள் உட்பட மொத்தம் 107 பதக்கங்களை வென்றது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா வென்ற மொத்தப் பதக்கங்களின் எண்ணிக்கையில் அதிகபட்சம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.