வட கிழக்கு மியான்மரில் உள்ள புலம் பெயர்ந்தவர்களுக்கான முகாமின் மீது, நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில், 29 பேர் உயிரிழந்தனர்.
கடந்த 2021-ஆம் ஆண்டு மியான்மரில் ஏற்பட்ட இராணுவ புரட்சியின் காரணமாக, அந்நாட்டில் ஆட்சியில் இருந்து வந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தூக்கி எறியப்பட்டு, இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.
மியான்மரில் தன்னாட்சி கோரி பல வருடங்களாக கசின் சுதந்திர அமைப்பு போராடி வருகிறது. வடகிழக்கு மியான்மரில் இந்த அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள லைசா நகருக்கு வெளியே புலம்பெயர்ந்த மக்களுக்கான முகாம் உள்ளது.
இந்த நிலையில், திங்கட்கிழமை இரவு இப்பகுதியில் வெடி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் புலம் பெயர்ந்த முகாமில் தங்கியிருந்த 11 குழந்தைகள் உட்பட சுமார் 29 பேர் உயிரிழந்தனர். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சிலருடைய நிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் உயரம் என்று அஞ்சப்படுகிறது.
உயிரிழந்தவர்கள் அனைவரும் அப்பாவி பொதுமக்கள் என கசின் சுதந்திர குழு தெரிவித்துள்ளது. பொதுமக்கள் எங்களுக்கு அளித்து வரும் ஆதரவை விரும்பாத மியான்மர் இராணுவம் இத்தகைய தாக்குதல்களில் ஈடுபடுவதாக கசின் சுதந்திர குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இத்தாக்குதலின் பின்னணியில் இராணுவம் இல்லை என்றும், அப்பகுதியில் இராணுவத்தினருக்கு எந்த செயல்பாடும் இல்லை என்றும் ஆட்சியில் இருக்கும் இராணுவ அமைப்பின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜா மின் டுன் தெரிவித்துள்ளார்.