கேமரூனில் கனமழையின் காரணமாக, ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி, 27 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனில் ஞாயிற்றுக்கிழமை கனமழை பெய்தது. குறிப்பாக, 2 மாவட்டங்களில் பெய்த தொடர் மழையின் காரணமாக, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்பகுதியில் உள்ள தாழ்வான இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்தது. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது.
பங்கோலோ பகுதியில் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன. ஏராளமான வீடுகள் பலத்த சேதமடைந்தன. பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.
நேற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 15 உடல்கள் மீட்கப்பட்டன. இது தவிர, வெள்ளப் பெருக்கில் மாயமான ஏராளமானவா்களைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். சில உடல்கள் வெள்ளத்தில் சிக்கி நீண்ட தூரம் அடித்துச் சென்றுள்ளது. கனமழையின் காரணமாக, ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி, 27 பேர் உயிரிழந்ததாகவும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கேமரூனில் கடந்த சில ஆண்டுகளாக மழை வெள்ளப் பேரிடா் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. இதற்கு காலநிலை மாற்றம் காரணமாகக் கூறப்பட்டாலும், அந்த நாட்டில் விதிமுறைகளை மீறி, தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை, சேதம் ஏற்படுவதற்குக் காரணமாக உள்ளதாக நிபுணா்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.