இஸ்ரேல் எல்லைகளில் போர் தீவிரம் அடைந்து வரும் நிலையில், காசா சுற்றுப் பகுதிகளில் ஹமாஸ் இயக்கத்தினரின் 1,500 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கு இடைப்பட்ட எல்லைப் பகுதியாக காசா அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் ஹமாஸ் இயக்கத்தினரின் படை தன்னாட்சி செய்து வருகிறது. இதற்கு பாலஸ்தீனம் முழு ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால், அவ்வப்போது காசா எல்லையைக் கைப்பற்ற இஸ்ரேல் பலமுறை தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இந்நிலையில் இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கத்தினர் கடந்த சில தினங்களுக்கு முன் தீடீர் தாக்குதலை தொடங்கியது. தங்கள் நாட்டுக்குள் திடீர் தாக்குதலில் ஈடுபட்ட ஹமாஸ் இயக்கத்தினரைக் குறிவைத்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இது குறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரிச்சர்ட் ஹெட்ச் கூறுகையில், “இஸ்ரேல் எல்லையில் உள்ள காசாவை சுற்றியுள்ள பகுதிகளில் 1,500-க்கும் மேற்பட்ட ஹமாஸ் தீவிரவாதிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் எல்லைப் பகுதிகளில் குறிப்பிடத்தகுந்த அளவில் கட்டுப்பாட்டை மீட்டெடுத்துள்ளனர். இதுவரை எந்த ஊடுருவலும் நடைபெறவில்லை. ஆனால், இன்னும் ஊடுருவல் நடக்கலாம். எல்லையைச் சுற்றியிருக்கும் அனைத்து மக்களையும் வெளியேற்றும் பணியை ராணுவம் கிட்டத்தட்ட முடித்துவிட்டது” என்று தெரிவித்தார்.
முன்னதாக, இஸ்ரேல் இரவு முழுவதும் நடத்தி வந்த தொடர் வான்வழித் தாக்குதல்களால் காசாவில் ஹமாஸ் தீவிரவாதிகளின் 200 இலக்குகளில் தாக்குதல் நடத்தியதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
இதனிடையே, “போரை நாங்கள் தொடங்கவில்லை, ஆனாலும் நாங்கள் அதை முடித்து வைப்போம்” என்று ஹமாஸ் இயக்கத்தினருக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காசா மீது பெரும் தாக்குதலை இஸ்ரேல் படைகள் திங்கள்கிழமை மேற்கொண்டன. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து காசா பகுதி முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் இஸ்ரேல் ராணுவம் கொண்டு வந்துள்ளது. “காசா பகுதி, தெற்கு எல்லையோரப் பகுதிகளில் நாங்கள் பெரும் தாக்குதலை நடத்தினோம். இதன்மூலம் காசா பகுதி முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கு எரிபொருள், உணவு, மின்சார வசதி முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கு நாங்கள் மனிதர்களோடு போரிடவில்லை. மிருகங்களோடு போரிடுகிறோம். அதற்கு ஏற்றவாறு நாங்கள் செயல்படுகிறோம். காசா முழுமையாக எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது என்பதை இப்போது அறிவிக்கிறோம்” என்று இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் கேலன்ட் தெரிவித்திருந்தார்.