2028-ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2028-ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெற்றுள்ள விளையாட்டுகளின் முதற்கட்ட பட்டியலை ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள் குழு வெளியிட்டது. இப்பட்டியலில் கிரிக்கெட் இடம் பெறவில்லை என்றாலும், கடந்த ஜூலை மாதம் கூடுதலாக சேர்க்கப்பட வேண்டிய விளையாட்டுப் பட்டியலில் கிரிக்கெட் இருந்தது. இதுகுறித்து இந்த வாரம் மும்பையில் நடக்கும் சர்வதேச ஒலிம்பிக் குழுக் கூட்டத்தில் உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக்கில், கிரிக்கெட்டை டி20 தொடராக நடத்தலாம் என்று ஐசிசி பரிந்துரை செய்திருக்கிறது. குறிப்பிட்ட கட் ஆஃப் தேதி ஒன்றை நிர்ணயம் செய்து, அப்போது தரவரிசையில் முதல் ஆறு இடத்திலிருக்கும் அணிகளை அதில் பங்கேற்க வைக்கலாம் எனவும் தெரிவித்திருக்கிறது.
கடைசியாக 1900ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டது. அதில் பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் என இரண்டு அணிகள் மட்டுமே பங்கேற்றன. அதில் வென்ற பிரிட்டன் அணி தங்கப் பதக்கமும், பிரான்ஸ் அணி வெள்ளி பதக்கமும் வென்றது.
ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்படும் பட்சத்தில் ஆசிய கண்டங்களில் ஒலிம்பிக்கிற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். ஏற்கனவே, ஆசிய விளையாட்டு மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் கிரிக்ட் இடம் பெற்றுள்ளன. இந்த இரண்டிலுமே கிரிக்கெட்டிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.