இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாதிகள் அப்பாவி பொதுமக்களை குறிவைத்து மிருகத்தனத்தை நடத்தியுள்ள காட்சிகள் கேமராவில் சிக்கிய காட்சிகள் தற்போதுச் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டுள்ளது. இதில் ஹமாஸ் பயங்கரவாதிகள் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்களைக் கெடுமைப்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியதை அடுத்து, இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. இரு தரப்புக்கும் இடையே மோதல் தொடங்கி 4 நாட்கள் முடிந்து 5வது நாளை எட்டி உள்ளது.
இந்த போரில் 900 க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். சுமார் 2400 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் 100 க்கும் மேற்பட்டோர் இன்னும் பயங்கரவாதிகளின் பிடியில் உள்ளனர்.
ஹமாஸ் 5,000 க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை காசா பகுதியில் இருந்து இஸ்ரேலுக்குள் ஏவி, பல இஸ்ரேலிய வீரர்களை கொன்று எல்லையை கைப்பற்றியது.
ஹமாஸ் பயங்கரவாதிகள் தெற்கு இஸ்ரேலில் இசை விழா மற்றும் குடும்பங்கள் வசிக்கும் வீடுகள் மீது தாக்குதல் நடத்தி, பொதுமக்களை கொடூரமாக படுகொலை செய்தனர்.
ஹமாஸ் பயங்கரவாதிகள் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்களைக் கொல்வதாக சமூக ஊடகங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன. ரெபெல் நியூஸ் பத்திரிகையாளர் இயன் மைல்ஸ் சியோங் பகிர்ந்த வீடியோவில், மத்தியில் தெற்கு இஸ்ரேலில் இசை விழாவில் ஹமாஸ் பயங்கரவாதிகளின் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு நடத்தியதால், அங்கு இருந்தவர்கள் ஓடுவதைக் காண முடிந்தது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களுக்கு மற்றவர்கள் உதவி செய்யும் போது ஒரு பெண் கண்ணீர் விட்டு அழுததைக் காண முடிந்தது. மேலும் தங்கள் உயிரைக் காப்பாற்றும் நம்பிக்கையில் தரையில் ஊர்ந்து கொண்டிருந்தனர்.
பத்திரிக்கையாளர் ஆதித்ய ராஜ் கவுல் பகிர்ந்த 55 வினாடி காட்சிகளில், ஹமாஸ் பயங்கரவாதிகள் பிடிபட்ட இஸ்ரேலிய குடிமக்களையும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை வீரர்களையும் சித்திரவதை செய்வது காணப்பட்டது. காயத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கயிறுகளால் கட்டப்பட்டு மூக்கில் இருந்து ரத்தம் வழிந்தபடி காணப்பட்டனர்.
ஹமாஸ் பயங்கரவாதிகள் அப்பாவி பொதுமக்களை இன்னும் மிக மோசமாக படுகொலை செய்து வந்தது, இந்தக் காட்சிகள் மூலம் வெளி உலகிற்கு தெரியவந்துள்ளது.