சட்ட விரோத பணப் பரிமாற்றம் வழக்கில் சீனாவைச் சேர்ந்த பிரபல செல் போன் நிறுவன உரிமையாளர்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சீனாவைச் சேர்ந்த விவோ என்ற செல் போன் நிறுவனம் இந்தியாவில் மொபைல் போன்களை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம், சிபிஐசிபிஎல் என்ற நிறுவனத்துடன் இணைந்து மொபைல் போன் தயாரித்து வந்தது. கடந்த 2014-ம் ஆண்டு இந்த நிறுவனம் சீனாவைச் சேர்ந்தவர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மோசடி ஆவணங்கள் மற்றும் போலி ஆணவங்கள் கொடுத்து சிபிஐசிபிஎல் என்ற நிறுவனம் பதிவு செய்துள்ளதாக மத்திய கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சகம் புகார் அளித்தது. அதன் பேரில், டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி விவோ மற்றும் அதன் தொடர்புடைய 23 இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர்.
இந்த நிலையில், சட்ட விரோத பணப் பரிமாற்றம் வழக்கில், சீனாவைச் சேர்ந்த குவாவென் கியாங், லாவா இண்டர்நேஷனல் இயக்குநர் ஹரி ஓம் ராய், நிறுவன ஆடிட்டர் நிதின் கார்க், ராஜன் மாலிக் ஆகிய 4 பேரை அதிரடியாக கைது செய்தனர்.