ஆப்கானிஸ்தானின் வடமேற்கு பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகியுள்ளதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கு பகுதியான ஹெராத் நகருக்கு வடமேற்கே 40 கிலோ மீட்டர் தொலைவில் சனிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தின் தொடர்ச்சியாக, அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இந்த நிலநடுக்கத்தால் ஜிண்டா ஜன் மற்றும் கோரியான் மாவட்டங்களில் 12 கிராமங்கள் முற்றிலும் அழிந்து விட்டன.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4000-ஐ கடந்து உள்ளது. இதில் பல ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயமடைந்து உள்ளதாகவும், மீட்கப்பட்ட பலர் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.
4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியானதாகவும், சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளதாகவும், 1,320 வீடுகள் சேதமடைந்தும், இடிந்தும் இருப்பதாக ஆப்கானிஸ்தானின் பேரிடர் மீட்புத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜன்னன் சயீக் தெரிவித்து உள்ளார்.
இந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,000-ஐ தாண்டி இருக்கும் நிலையில், இன்று மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது.
ஆப்கானிஸ்தானின் வடமேற்கு பகுதியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகியுள்ளதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.