பீகார் மாநிலம் பக்சர் பகுதியில் பயணிகள் அதிவிரைவு ரயில் விபத்தில் சிக்கியது. இதில், 4 பேர் பரிதாபமாகப் பலியானார்கள்.
டெல்லி ஆனந்த் விஹாரில் இருந்து அசாம் மாநிலம் காமாக்யா நோக்கில் பயணிகள் அதிவிரைவு இரயில் சென்று கொண்டு இருந்தது. இந்த இரயில் நேற்று இரவு 9.35 மணியளவில் டானாபூர் பிரிவின் ரகுநாத்பூர் இரயில் நிலையம் அருகே திடீரென தடம் புரண்டது. தண்டவாளத்திலிருந்து இரயில் சக்கரம் மின்னல் வேகத்தில் வெளியேறியது. பயங்கர சத்தம் காரணமாக, இரயில் பெட்டிக்குள் இருந்தவர்கள், ஆண், பெண் என பலரும் பயத்தில் அலறினர். இந்த விபத்தில் 4 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
ஓடி வந்த உள்ளூர் மக்கள், தங்களிடம் உள்ள செல்போன் வெளிச்சத்தை பயன்படுத்தி, இரயில் பெட்டிக்குள் சிக்கி இருந்தவர்களைப் போராடி மீட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தேசிய பேரிடர் மீட்புப் படையினர், காவல்துறையினர் விடிய விடிய மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தற்போதும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. விபத்தில் சிக்கியவர்கள் மருத்துவனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
சம்பவ இடத்திற்கு மத்திய இரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் விரைந்துள்ளார். இது குறித்து, அவர் தனது எக்ஸ் பக்கத்தில், மருத்துவக் குழுக்கள் அனுப்பட்டு மீட்புப் பணிகள் துரித வேகத்தில் நடைபெறுகிறது எனத் தெரிவித்துள்ளார்.