ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா.
ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடரில் டெல்லியில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடின.
இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் சத்ரான் களமிறங்கினர்.
இதில் ரஹ்மானுல்லா குர்பாஸ் 28 பந்தில் 21 ரன்கள் அடித்து ஷார்துல் பந்தில் ஆட்டமிழந்தார். இப்ராஹிம் சத்ரான் 28 பந்தில் 22 ரன்களில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். ரஹ்மத் ஷா 22 பந்தில் 16 ரன்களில் ஷார்துல் பந்தில் ஆட்டமிழந்தார்.
ஹஷ்மத்துல்லா ஷாஹிதி 88 பந்தில் 80 ரன்களை அடித்து குலதீப பந்தில் ஆட்டமிழந்தார். அஸ்மத்துல்லா உமர்சாய் 69 பந்துகளில் 62 ரன்களை எடுத்து ஹர்திக் பந்தில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்கள் எல்லாம் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
50 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்கள் இழப்பிற்கு 272 ரன்களை எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்களையும் ஹர்திக் 2 விக்கெட்களையும் எடுத்தனர்.
273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர்.
இதில் ரோஹித் சர்மா ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக விளையாடி 16 பௌண்டரீஸ் மற்றும் 5 சிக்சர்ஸ் அடித்து 131 ரன்களை எடுத்துள்ளார். இதன் மூலம் அதிவேக 1000 ரன்களை கடந்த வீரர் என்றும் உலகக்கோப்பையில் அதிக சதம் மற்றும் அதிக சிக்சர்ஸ் எடுத்த வீரர் என்றும் சாதனை படைத்துள்ளார்.
இஷான் கிஷன் 47 பந்துகளில் 47 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார், இவரை தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி தனது சொந்த மண்ணில் அரைசதம் விளாசினார். ஸ்ரேயாஸ் ஐயர் 23 பந்துகளில் 25 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனால் இந்திய அணி 35 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 273 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது 131 ரன்களை எடுத்த ரோஹித் சர்மாவுக்கு வழங்கப்பட்டது.
‘