திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியில் பத்மநாபபுரம் அரண்மனையில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, நவராத்திரி விழாவில் பங்கேற்க பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து ஆண்டுதோறும் தேவாரக்கட்டு சரஸ்வதி, சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமாலை முருகன் ஆகிய சுவாமி விக்ரகங்கள் ஊர்வலமாகத் திருவனந்தபுரம் கொண்டு செல்லப்படுவது வழக்கம்.
மன்னராட்சிக்குப் பின்னரும், இந்த விழா மரபு மீறப்படாமல் அப்படியே நடைபெற்று வருகிறது. வரும் 15-ம் தேதி நவராத்திரி விழா கொண்டாடப்படுவதையொட்டி, பத்மநாபபுரத்தில் இருந்து பவனி கேரளாவிற்குப் புறப்பட்டது
இந்த ஆண்டு பாரம்பரிய முறைப்படி அணிவகுப்பு மரியாதை, நெற்றிப்பட்டம் சூடிய யானை அணிவகுக்கச் சுவாமி விக்ரகங்கள் புறப்பாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதனையொட்டி, பங்கேற்கும் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் விக்ரகம் பத்மநாபபுரம் நீலகண்ட சுவாமி கோவிக்குப் புறப்பட்டது.
இந்த விழாவில், கோவா ஆளுநர் பிஎஸ்ஸ்ரீதரன் பிள்ளை, மேற்கு வங்க ஆளுநர் சிபி ஆனந்தா போஸ் உள்ளிட்டோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். நாளை கேரளாவில் உள்ள களியக்காவிளையில் கேரள ஆளுநர் ஆரிப் முகமது வரேற்கிறார்.
பத்மநாபபுரம் நவராத்திரி விழா, தமிழ்நாடு மற்றும் கேரள மாநில மக்கள் இணைந்து கொண்டாடி வருவதால், இந்த விழா வழக்கத்தைவிட தற்போது களைகட்டியுள்ளது.