பாதுகாப்பு அமைச்சரும், பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சரும் பாரீசில் பாதுகாப்பு தொடர்பான 5-ம் ஆண்டு பேச்சுக்களில் ஈடுபட்டனர்; பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டது
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை நிறைவு செய்வதற்கு முன்பாக, பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் செபாஸ்டியன் லெகார்னுவுடன் பாதுகாப்பு தொடர்பான 5-ம் ஆண்டு பேச்சுக்களில் ஈடுபட்டார்.
பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் வகையில், பிராந்திய நிலைமையை மதிப்பிடுவது முதல் தற்போது நடைபெற்று வரும் இருநாடுகளின் ராணுவத்திற்கு இடையேயான பேச்சுக்கள் வரை இருவரும் விரிவாக விவாதித்தனர்.
நடைமுறையில் உள்ள பாதுகாப்பு தொடர்பான திட்டங்களை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். இரு நாடுகளின் பாதுகாப்புத் தொழில்துறைகளுக்கு இடையோயான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விவாதித்தனர்.
விண்வெளி, இணையதளம் செயற்கை நுண்ணறிவு போன்ற முக்கிய களங்களில் சாத்தியமான ஒத்துழைப்பு குறித்தும் அவர்கள் விவாதித்தனர். கூட்டத்திற்கு முன்னதாக பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சகத்தின் ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது.
முன்னதாக, பாரீஸ் அருகே ஜென்னெவில்லியர்ஸில் உள்ள சஃப்ரான் எஞ்சின் பிரிவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தைப் பார்வையிட்ட ராஜ்நாத் சிங், விமான – எந்திர தொழில்நுட்பத்தின் சமீபத்திய முன்னேற்றங்களைப் பார்வையிட்டார்.
இந்தியாவுடன் ஒத்துழைப்பதற்கான திட்டங்கள் குறித்து கவனம் செலுத்தும் வகையில் ஃபிரான்சின் முன்னணி பாதுகாப்பு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளையும் அவர் சந்தித்தார்.
வளரும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் உட்பட இந்தியாவில் வளர்ச்சி மற்றும் உற்பத்தியின் நன்மைகளைத் திரு ராஜ்நாத் சிங் எடுத்துரைத்தார். ஒரு பெரிய, திறன்மிக்க மனிதவளம், உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு மற்றும் வலுவான சட்ட கட்டமைப்பு போன்ற இந்திய சந்தையின் உள்ளார்ந்த நன்மைகளை அவர் சுட்டிக்காட்டினார். அக்டோபர் 10, அன்று பாரிஸ் வந்தடைந்த பாதுகாப்பு அமைச்சர், அங்குள்ள இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடினார்.
தமது இரு நாட்டு சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக, ரோம் நகரில் இத்தாலிய பாதுகாப்பு அமைச்சர் கைடோ குரோசெட்டோவை, ராஜ்நாத் சிங் சந்தித்துப் பேசினார்.
பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக் கொள்கை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, ராணுவத் துறையில் கல்வி, கடல்சார் கள விழிப்புணர்வு, பாதுகாப்புத் தகவல்களைப் பகிர்தல் மற்றும் கூட்டு மேம்பாடு, இணை உற்பத்தி மற்றும் கூட்டு முயற்சிகளை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்புத் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
தமது பயணத்தின் ஒரு பகுதியாக ரோம் நகரில் இத்தாலி பாதுகாப்பு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் பிற உயர்நிலை தொழில்துறை தலைவர்களையும் ராஜ்நாத் சிங் சந்தித்தார்.