ஒரு நாள் கிரிக்கெட் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது தென் ஆப்பிரிக்கா.
ஒரு நாள் உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றையப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் லக்னோவில் விளையாடி வருகிறது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் தலைவர் பாட் கம்மின்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன் படி முதலில் தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் செய்தது.
இதில் தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக் மற்றும் தேம்பா பாவுமா ஆகியோர் களமிறங்கினர். இதில் குயின்டன் டி காக் சதம் விளாசி மொத்தமாக 106 பந்துகளில் 109 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
தேம்பா பாவுமா 55 பந்துகளில் 35 ரன்களுடனும், ராஸ்ஸி வான் டெர் டுசென் 30 பந்துகளில் 26 ரன்களுடனும் ஆட்டமிழக்க அடுத்ததாக களமிறங்கிய ஹென்ரிச் கிளாசென் அரைசதம் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரங்களில் ஆட்டமிழக்க 50 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 7 விசிக்கெட்கள் இழப்பிற்கு 311 ரன்களை எடுத்துள்ளது.
ஆஸ்திரேலியா அணியின் அதிகபட்சமாக கிளென் மேக்ஸ்வெல் மற்றும் மிட்செல் ஸ்டார்க் தலா 2 விக்கெட்களும், ஜோஷ் ஹேசில்வுட், பாட் கம்மின்ஸ் மற்றும் ஆடம் ஜம்பா ஆகியோர் தலா 1 விக்கெட்களையும் வீழ்த்தினார்.
312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்கள் மிட்செல் மார்ஷ் மற்றும் டேவிட் வார்னர் களமிறங்கினர்.
இதில் 5 வது ஓவரில் மிட்செல் மார்ஷ் 7 ரன்களுக்கும், 6 வது ஓவரில் டேவிட் வார்னர் 13 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். பின்பு அடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க மார்னஸ் லாபுசாக்னே மட்டும் 46 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனால் ஆஸ்திரேலியா அணி 40 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 177 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது.
இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது 109 ரன்களை அடித்த தென் ஆப்பிரிக்கா வீரர் குயின்டன் டி காக்வுக்கு வழங்கப்பட்டது.