இந்தியாவில் மிகப் பெரிய லாட்டரி தொழில் அதிபர் கோவை மார்ட்டின். சத்தமின்றி கோடிகளைக் குவித்து வருகின்றார். ஆனால், அவர் நேர்மையற்ற வகையில் வணிகம் செய்கிறார் என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு.
இதனால், மார்ட்டினுக்குச் சொந்தமான நிறுவனங்களில் ஒரு புறம் அமலாக்கத்துறை, மறுபுறம் வருமானவரித்துறை என ஒருசேர ரெய்டு மேளாவை நடத்தி வருகின்றனர். நேற்று தொடங்கிய சோதனை இன்றும் தொடர்கிறது.
கோவை வெள்ளக்கிணறு பிரிவில் மார்ட்டின் குழுமம் கார்ப்பரேட் அலுவலகம், கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஹோமியோபதி கல்லூரி, காந்திபுரம் 6 -வது தெருவில் உள்ள மற்றொரு அலுவலகம் என 4 இடங்களில் இன்றும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தற்போது, பியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் (பி) லிமிடெட் என்ற பெயரில் செயல்படும் மார்ட்டின் நிறுவனம், கடந்த 2019 -ல் சிக்கிம் மற்றும் கேரளா அரசு அதிகாரிகளைப் பயன்படுத்தி ரூ.910.3 கோடி வரை ஊழல் மற்றும் மோசடி செய்துள்ளனர். இதன் மூலம் கிடைத்த பணத்தில் 40 நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளனர். இதை மோப்பம் பிடித்ததன் எதிரொலியாகவே சோதனை. இதனால், இந்த 40 இடங்களும் சீல் வைக்கப்பட்ட வாய்ப்பு அதிகம் என்கின்றனர் அதிகாரிகள்.
ஏற்கனவே, மார்ட்டினுக்கு சொந்தமான ரூ.451.07 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.