ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் உள்ள சந்திரபாபு நாயுடு உயிருக்கு ஆபத்து இருப்பதாக, அவரது மகன் நாரா லோகேஷ், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து புகார் அளித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தனது பதவிக்காலத்தின் போது திறன் வளர்ப்பு திட்டத்தில் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக ஆந்திர மாநில சிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சந்திரபாபு நாயுடு ஜாமீன் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் சந்திரபாபு நாயுடு மீது மேலும் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அமராவதி உள்வட்டசாலை முறைகேடு, ஃபைபர் நெட் முறைகேடு மற்றும் அங்கல்லு வன்முறை வழக்கு ஆகிய 3 வழக்குகளில் அவரை கைது செய்ய ஜெகன்மோகன் தலைமையிலான ஆந்திர மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதையடுத்து இந்த 3 வழக்குகளிலும் முன்ஜாமீன் கோரி சந்திரபாபு நாயுடு தரப்பில் ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம் 2 வழக்குகளில் சந்திரபாபு நாயுடுவுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே, சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ், “இசட் பிளஸ் பாதுகாப்பில் இருக்கும் எதிர்க்கட்சித் தலைவரான சந்திரபாபு நாயுடுவின் உயிருக்கு சிறையில் வைத்து ஆபத்தை ஏற்படுத்த அரசு திட்டம் தீட்டுகிறது. சந்திரபாபு நாயுடுவுக்கு சிறையில் பாதுகாப்பு இல்லை. கொசுக்கள் அதிகம் என்று சிறை அதிகாரிகளிடம் கூறினாலும் அதை பொருட்படுத்துவதில்லை
சிறையில் ரிமாண்ட் கைதியாக இருந்த ராஜமுந்திரி கிராமிய மண்டலம் தவளேஸ்வரத்தைச் சேர்ந்த கஞ்செட்டி வீரவெங்கட சத்தியநாராயணா டெங்குவால் உயிரிழந்தார். சந்திரபாபுவுக்கும் இதேபோன்று செய்ய ஜெகன் மோகன் ரெட்டி சூழ்ச்சிகள் செயல்படுத்தி வருகிறார். சந்திரபாபுவுக்கு என்ன நடந்தாலும் அதற்கு ஜெகன் மோகன் தான் பொறுப்பு” என தெரிவித்தார்.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து, உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள சிறையில் சந்திரபாபு நாயுடு அடைக்கப்பட்டிருப்பதாகவும், பழிவாங்கல் நடவடிக்கைக்காக ஜெகன் மோகன் அரசு ஆட்சியை தவறாக பயன்படுத்தி வருவதாகவும் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் புகார் தெரிவித்துள்ளார்.