திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, இன்று முதல் வரும் 26-ஆம் தேதி வரை, சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது, திருப்பதி ஏழுமலையான் கோவிலில், வருகிற 15-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை நடக்க உள்ள, இரண்டாவது பிரம்மோற்சவ விழாவில், தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர். எனவே, பயணியரின் வசதிக்காக, தமிழகத்தில் இருந்து, இன்று முதல் 26-ஆம் தேதி வரை, சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோவை, மதுரை, காரைக்குடி, கும்பகோணத்தில் இருந்து, திருப்பதிக்கு வழக்கமாக செல்லும், 52 விரைவு பேருந்துகளுடன், 48 சிறப்பு பேருந்துகளை இயக்கப்பட உள்ளது. பயணியரின் தேவைக்கு ஏற்றார் போல, விரைவு பேருந்துகளை அதிகரித்து இயக்க உள்ளோம். பயணியர், www.tnstc.in என்ற இணையதளம் மற்றும், tnstc official செயலி மூலம், முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இதேபோல், வார விடுமுறை நாட்களை முன்னிட்டு, இன்று முதல் சென்னையிலிருந்தும், பிற இடங்களிலிருந்தும் விடுமுறைக்காக ஏராளமானோர் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணத்தை மேற்கொள்வார்கள். இதனால், சென்னையிலிருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகளை இயக்கப்பட உள்ளன.
மேலும், கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும், பெங்களூரிலிருந்து பிற இடங்களுக்கும் 300 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 600 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.