தமிழக வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களில் ஒன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை. இந்த மளிகையில், முன் எப்போதும் இல்லாத வகையில் ஒரு சிறப்பான செயலை அரங்கேற்றியுள்ளார் நமது மேதகு ஆளுநர் ஆர்.என்.ரவி.
அதாவது, வரும் 15 -ம் தேதி முதல் அக்டோபர் 24 -ம் தேதி வரை நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. 15 -ம் தேதி அன்று நடைபெறும் நவராத்திரி கொலு விழாவை மேதகு ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைக்கிறார்.
தினமும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை நவராத்திரி கொலு கொண்டாட்டம் நடைபெறும். இதில், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட அனைவரும் கலந்து கொள்ளலாம். ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் மற்றும் பிற விவரங்கள் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.
நவராத்திரி விழாவில், தினமும் மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை கலை நிகழ்ச்சியும் நடைபெறும். ஆர்வமுள்ள நபர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தங்கள் பெயர், வயது, பாலினம், முகவரி, தொடர்பு எண், புகைப்பட அடையாள சான்று மற்றும் வருகைக்கான தேதி உள்ளிட்ட விவரங்களை rbnavaratrifest@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் அனுமதி வழங்கப்படும்.
பார்வையாளர்கள், சென்னை ஆளுநர் மாளிகையின் 2-ம் எண் கேட்டில் உறுதிப்படுத்தப்படுத்தப்பட்ட மின்னஞ்சல் மற்றும் அசல் புகைப்பட அடையாள சான்றுகளைக் காட்டி கலந்து கொள்ளலாம். இதில், வெளிநாட்டுப் பிரஜைகளும் கூட பங்கேற்கலாம். ஆனால், அவர்களின் அசல் கடவுச்சீட்டு மட்டுமே அடையாள சான்றாகக் கருதப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.