2023 ஒரு நாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் முதல் போட்டி அக்டோபர் 14 ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 1.32 லட்சம் இரசிகர்கள் அமரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான அகமதாபாத் மைதானத்தில் இரு அணிகளும் விளையாடுவதை பார்க்க இரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
இந்தியாவில் உலகக்கோப்பை தொடர் திருவிழா போல் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்தியா – பாகிஸ்தான் போட்டியை களத்திலேயே திருவிழாவாக மாற்ற பிசிசிஐ முடிவு செய்துள்ளது. அதாவது இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு முன்பாக கலை நிகழ்ச்சிகளுக்கு பிசிசிஐ தரப்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஆட்டம் தொடங்குவதற்கு 2 மணி நேரங்களுக்கு முன்பாக கலை நிகழ்ச்சிகள் தொடங்கவுள்ளது. இதில் பிரபல திரைப்பட பாடகர்களான அர்ஜித் சிங், சுக்விந்தர் சிங், சுனிதி சவுகான், ஷங்கர் மகாதேவன் மற்றும் பாடகி நேஹா கக்கர் ஆகியோர் பல்வேறு பாடல்களை பாடவுள்ளனர்.
அதேபோல் நடன கலைஞர்களின் நடனமடையுள்ளனர். இதுமட்டுமல்லாமல் இந்தியா – பாகிஸ்தான் போட்டியை நேரில் காண பிரபல நடிகர் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், முன்னாள் சிரஸிகேட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர் வரவுள்ளனர். அதேபோல் பாலிவுட் நடிகர், நடிகைகளும் போட்டியை காண வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் அகமதாபாத் மைதானத்திற்கு வரும் இரசிகர்கள் காலை 10 மணி முதலே அனைத்து நுழைவு வாயில்கள் மூலமாக அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. அவர்களுக்கான பாதுகாப்பு மற்றும் தண்ணீர் வசதிகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன. இதனால் டிக்கெட்டை வாங்கியுள்ள கிரிக்கெட் இரசிகர்கள் அனைவரும் செல்ஃபோன், தொப்பி உள்ளிட்டவை மட்டும் கொண்டு வந்தால் போதுமானது என்று கூறப்பட்டுள்ளது.