இஸ்ரேல் வந்த அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலர் லாயிட் ஆஸ்டின், தலைநகர் டெல் அவிவில் கூறுகையில், இஸ்ரேலுக்கான அமெரிக்க ஆதரவு இரும்புக் கவசம் போன்றது என்று கூறினார்.
கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலுக்கு இஸ்ரேல் காஸா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. போர் தொடங்கிய முதல் நாளே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா இருக்கும் என்று கூறியிருந்தார். மேலும், மத்திய தரைக்கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது நாசக்காரப் போர்க்கப்பலையும் இஸ்ரேலுக்கு அனுப்பி வைத்தது.
இதையடுத்து, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் நேற்று இஸ்ரேல் சென்றார். தலைநகர் டெல் அவிவில் உள்ள ராணுவ அமைச்சகத்தில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்துப் பேசினார். அப்போது, “உங்களை தற்காத்துக் கொள்ளும் அளவுக்கு நீங்கள் பலம் வாய்ந்தவர்களாக இருக்கலாம். ஆனால், அமெரிக்கா இருக்கும்வரை நீங்கள் தனியாகப் போராட வேண்டிய அவசியமில்லை. போர்ச்சூழலைப் பயன்படுத்தி யாராவது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினால், நாங்கள் சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். இதுதான் நான் கொண்டு வந்திருக்கும் செய்தி” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலர் லாயிட் ஆஸ்டின் இன்று இஸ்ரேல் வந்தடைந்தார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் லாயிட் வெளியிட்டிருக்கும் பதிவில், “டெல் அவிவ் நகருக்கு வந்தடைந்தேன். இன்று இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு அமெரிக்காவின் ஆதரவு இரும்புக் கவசமானது என்பதை நிரூபிக்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமைச்சர் யாவ் கேலன்ட் மற்றும் பிற மூத்த தலைவர்களைச் சந்தித்து, பாதுகாப்புத் தேவைகள் குறித்து நேருக்கு நேர் பேசுவேன். நாங்கள் இஸ்ரேல் மக்களுடன் நிற்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.
தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாதுகாப்பு அமைச்சர் யாவ் கேலன்ட் மற்றும் இஸ்ரேலிய போர் அமைச்சரவை உறுப்பினர்களை ஆஸ்டின் சந்தித்தார். ஆஸ்டின் வருகையை மேற்கோள்காட்டி அமெரிக்க பாதுகாப்புத் துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு அமெரிக்காவின் ஆதரவில் சந்தேகத்திற்கு இடமே இல்லை. இந்த மோதலையும், போரையும் பயன்படுத்தி வேறு எந்த நாடாவது வன்முறையை அதிகரிக்கத் திட்டமிட்டால் நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்” என்று தெரிவித்திருக்கிறது.
மேலும், அமெரிக்கா இப்பகுதியில் தனது படை பலத்தை அதிகரிப்பதுடன், இஸ்ரேலுக்கு இராணுவ உதவிகளையும் அனுப்ப ஆரம்பித்திருக்கிறது. அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் ஆஸ்டின் கருத்துப்படி, இந்த வாரம் உக்ரைன் பாதுகாப்புத் தொடர்புக் குழுவின் 16-வது கூட்டத்தை கூட்டினார். மேலும், பிரஸ்ஸல்ஸில் நடந்த நேட்டோ பாதுகாப்பு அமைச்சர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில், இஸ்ரேலுக்கு உதவுவதற்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை ஆஸ்டின் மீண்டும் வலியுறுத்தினார்.
இதனிடையே, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்டன், இன்று பாலஸ்தீனிய அதிபர் மஹ்மூத் அப்பாஸ் மற்றும் ஜோர்டான் மன்னர் அப்துல்லா ஆகியோருடன் இஸ்ரேல்-ஹமாஸ் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா விரும்புகிறது என்று தெரிவித்திருக்கிறார்.