அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தைச் சேர்ந்த தோட்டக்கலை ஆர்வலர் டிராவிஸ் கிரெய்கர் என்பவர், நீண்ட காலமாக வளர்த்து வந்த, 1,247 கிலோ கிராம் எடை கொண்ட பூசணிக்காய், உலகின் மிகப் பெரிய பூசணிக்காய் என்ற சாதனையைப் படைத்துள்ளது.
அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஹாஃப் மூன் பே பகுதியில் விவசாயிகளுக்கு ஒரு விநோதமான போட்டி நடைபெற்றது. விவசாயிகள் தங்களுடைய விவசாய நிலங்களில் மிக பெரிய பூசணிக்காய் வளர்ப்பதில் நடைபெற்ற அந்த போட்டியில் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். நீண்ட காலமாக இப்போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த 50-வது சம்பியன்ஷிப் போட்டியில், மின்னசோட்டா மாநிலத்தைச் சேர்ந்த 43 வயதான தோட்டக்கலை ஆர்வலரும், பயிற்சியாளருமான டிராவிஸ் கிரெய்கர் என்பவரும் கலந்து கொண்டார். இவர் நீண்ட காலமாக வளர்த்து வந்த, 1,247 கிலோ கிராம் எடை கொண்ட பூசணிக்காய், இப்போட்டியில் மிக பெரிய பூசணிக்காயாக தேர்ந்தெடுக்கப்பட்டது. போட்டியில் வென்ற டிராவிஸிற்கு, ரூபாய் 25 இலட்சம் பரிசு தொகையாக வழங்கப்பட்டது. மேலும், இது உலகின் மிகப் பெரிய பூசணிக்காய் என்ற சாதனையைப் படைத்துள்ளது.
கடந்த 2021-ஆம் ஆண்டில் இத்தாலியின் ஸ்டெபானோ கட்ரூபி என்பவருடைய 1,226 கிலோ கிராம் எடைக்கொண்ட பூசணிக்காய் உலகின் மிகப் பெரிய பூசணிக்காயாக இருந்தது. தற்போது, 21.3 கிலோ கிராம் வித்தியாசத்தில் அந்த சாதனையை முறியடித்துள்ளார்.
டிராவிஸ் வளர்த்த பூசணிக்காயைக் கொண்டு அமெரிக்கர்கள் விரும்பி உண்ணும் ‘பை’ எனும் உணவு வகைகளைச் சுமார் 687 எண்ணிக்கைகள் வரை தயாரிக்க முடியும் என்கின்றனர் சமையல் நிபுணர்கள்.
இப்போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தவர் வளர்த்த பூசணிக்காய் டிராவிஸ் வளர்த்ததை விட 113 கிலோ கிராம்கள் எடை குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.