பின்தங்கியிருக்கும் இளைஞர்களுக்கு அதிகாரமளிக்க தனியார், தொழில்துறை மற்றும் கார்ப்பரேட் பாதுகாப்பு மேலாண்மை பள்ளி மற்றும் ராஞ்சி செக்யூரிட்டி நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
விரிவான பாதுகாப்புக் கல்வியை வழங்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட, புகழ்பெற்ற நிறுவனமான தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள தனியார், தொழில்துறை மற்றும் கார்ப்பரேட் பாதுகாப்பு மேலாண்மைப் பள்ளி ராஞ்சி செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வு இன்று தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் (டாக்டர்) கல்பேஷ் எச்.வாந்த்ரா மற்றும் ராஞ்சி செக்யூரிட்டி நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் அனிருதா சிங் முன்னிலையில் நடைபெற்றது.
பாதுகாப்புத் துறையில் உள்ள திறன் இடைவெளியைக் குறைப்பதற்கும், சமூகத்தின் விளிம்புநிலை பிரிவினருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்.
பெரு நிறுவனங்கள் மற்றும் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களில் பணிபுரிய விரும்பும் இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பின்தங்கிய இளைஞர்கள் மற்றும் பெண்கள் இந்த சான்றிதழ் படிப்புகளால் பெரிதும் பயனடைவார்கள்.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரு நிறுவனங்கள் மற்றும் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களில் வேலைக்கு சேர விரும்பும் பின்தங்கிய இளைஞர்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில் திறன் மேம்பாட்டு சான்றிதழ் படிப்பை இணைய வழியிலும் வகுப்பறை வாயிலாகவும் கூட்டாக நடத்துவதை இந்த ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
திறன் மேம்பாடு மற்றும் மறுதிறன் பெறுவதற்கான வாய்ப்புகளைத் தேடும் பணியாளர்களுக்கு, குறிப்பாக பாதுகாப்புத் துறையில் உள்ள பெண்களுக்கு இந்தப் படிப்பு உதவியாக இருக்கும்.