காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெங்களூரு நகர முன்னாள் கவுன்சிலர் வீட்டில் இருந்து 23 அட்டைப் பெட்டிகளில் 500 நோட்டுகள் கட்டுக்கட்டாக அடுக்கிவைக்கப்பட்டு மெத்தைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 42 கோடி ரூபாயை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.
வருமான வரித்துறையினரும், அமலாக்கத்துறை அதிகாரிகளும் நாடு முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் சோதனை தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த வகையில், நேற்று நள்ளிரவு பெங்களூருவில் காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர் அஸ்வத்தம்மா வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனையில்தான் கட்டிலின் மெத்தைக்கு அடியில் 23 அட்டைப் பெட்டிகளில் 500 ரூபாய் நோட்டுக்களாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த 42 கோடி ரூபாயை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.
அஸ்வத்தம்மா கடந்த 2001-ம் ஆண்டு பெங்களூரு காவல் பைரசந்திரா வார்டில் (95-வது வார்டு) காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரது கணவர் அம்பிகாபதி ஒப்பந்ததாரர். இவர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.வான அகண்ட சீனவாச மூர்த்தியின் சம்பந்தியாவார். அம்பிகாபதி கடந்த 8-ம் தேதி கர்நாடக முதல்வர் சித்தராமையாவை சந்தித்து விட்டு வந்தார். அப்போது அவர், பெங்களூரு மாநகராட்சி ஒப்பந்ததாரர்களுக்கு விடுவிக்கப்பட வேண்டிய நிதியை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி விட்டு வந்ததாக செய்திகள் வெளியாகின.
இந்த சூழலில்தான், அம்பிகாவதி மற்றும் அஸ்வத்தம்மா தம்பதிக்குச் சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி இருக்கிறார்கள். பெங்களூரு சுல்தான் பாளையாவில் உள்ள 2 வீடுகள், காவல் பைரசந்திராவில் உள்ள அடுக்குமாடி வீடு, ஆத்மானந்தா காலனியில் அஸ்வதம்மா பெயரிலுள்ள அவரது தம்பி பிரதீப்பின் வீடு ஆகிய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது, ஒரு வீட்டின் அறையில் இருந்த கட்டிலில் விரிக்கப்பட்ட மெத்தைக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அட்டைப் பெட்டியில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்தது கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். மொத்தம் 23 அட்டைப் பெட்டிகளில் இருந்த பணத்தை கைப்பற்றி அதிகாரிகள் எண்ணிப் பார்த்தனர். அப்போது, மொத்தம் 42 கோடி ரூபாய் பணம் இருப்பது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், காரில் இருந்தும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் கவுன்சிலர் வீட்டில் இருந்து 42 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனிடையே, பணம் கைப்பற்றப்பட்டது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் அமலாக்கத்துறைக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள். ஆகவே, விரைவில் அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.