குறுவை பாசனத்திற்காக காவிரியில் உரிய அளவு தண்ணீர் திறக்காததால், சுமார் 33 சதவீதம் அளவுக்கு மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
குறுவை பாசனத்திற்காக, கடந்த ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. தொடர்ந்து அணையின் நீர்மட்டம் 40 அடிக்கு கீழ் சென்றதால், குறுவை பாசனத்திற்குத் திறக்கப்பட்ட நீர் கடந்த சில நாட்களாக முன்பு நிறுத்தப்பட்டது.
இந்த ஆண்டு தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை கர்நாடக அரசு வழங்காததாலும், போதிய மழைப்பொழிவு இல்லாததாலும் குறுவைப் பயிர்கள் சில இடங்களில் வீணாகி விட்டது. இதனால், 33 சதவீதம் அளவுக்கு மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் 78,000 ஹெக்டேர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டன. இவற்றில் 50,000 ஹெக்டேர் அளவில் அறுவடை பணிகள் முடிந்து விட்டது.
இதற்கிடையே தஞ்சை மாவட்டத்தில் வேளாண் துறை, புள்ளியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் அறுவடை செய்யும்போது ஹெக்டேருக்கு சராசரியாக 6,000 கிலோ நெல் கிடைத்த நிலையில், தற்போது சராசரியாக 4,232 கிலோ நெல் தான் கிடைத்துள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, இதற்கு முன்பு இல்லாத அளவில், இம்முறை குறுவையில் அதிக அளவில் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விடாததால், தஞ்சை மட்டுமின்றி ஒட்டுமொத்த டெல்டா மாவட்டங்களிலும் அதிகளவில் குறுவைப் பயிர்கள் வீணாகிவிட்டது. முன்பு ஏக்கருக்கு 45 மூட்டை கிடைத்த நிலையில். தற்போது 30 முதல் 35 மூட்டை தான் கிடைக்கிறது. இதற்கு முன் இந்த அளவுக்கு இழப்பு ஏற்பட்டது கிடையாது. அடுத்து சம்பா சாகுபடி தொடங்கலாமா, என்பதே தெரியாத நிலையில் உள்ளோம் என்று தெரிவித்தனர்.