தமிழகத்துக்கு வரும் 16ல் துவங்கி 30ம் தேதி வரையில் 15 நாட்கள், வினாடிக்கு 3,000 கன அடி வீதம், காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்ற காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரையை, காவிரி மேலாண்மை ஆணையம் உறுதி செய்து, தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் கடந்த மாதம் 29ல் கூடியது. அக்கூட்டத்தின் முடிவில், 3,000 கன அடி நீரை, தமிழகத்துக்கு திறந்துவிடும்படி உத்தரவிடப்பட்டது. ஆனாலும், இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை. மாறாக, கர்நாடகாவில் அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள் பெரும் போராட்டத்தில் இறங்கின. இதனால், மிகக்குறைந்த நீரை மட்டுமே கர்நாடகா திறந்துவிட்டது. இதற்கும் அம்மாநில விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.
காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. ‘காணொலி காட்சி’ வாயிலாக நடந்த இந்த கூட்டத்திற்கு, குழுவின் தலைவர் வினீத் குப்தா தலைமை வகித்தார். தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
மழை பொழிவு மற்றும் அணைகளில் நீர் இருப்பு உள்ளிட்ட அனைத்து புள்ளி விபரங்களையும் அலசி ஆராய்ந்து, இறுதியாக, 3,000 கன அடி நீரை, தமிழகத்துக்கு திறந்து விட வேண்டுமென ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்தது.
இந்த நீரை, வரும் 16ல் துவங்கி 30ம் தேதி வரையில், தமிழக – கர்நாடக எல்லையான பில்லிகுண்டுலுவில் திறந்துவிட அந்த பரிந்துரையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்நிலையில், டில்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் பரிந்துரையை ஏற்று அக்டோபர் 16 முதல் 30ம் தேதி வரை தண்ணீர் திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவிட்டுள்ளது.