இஸ்ரேலில் இருந்து 2-வது விமானத்தில் டெல்லியை வந்தடைந்த 235 இந்தியர்கள், பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய அரசுக்கும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் உருக்கமாக நன்றி தெரிவித்திருக்கின்றனர்.
பாலஸ்தீனத்தின் காஸா நகரை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த 7-ம் தேதி காலை சுமார் அரை மணி நேரத்தில் இஸ்ரேல் மீது 7,000 ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தினர். இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. போர் உச்சக்கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில், ஏராளமான இந்தியர்கள் இஸ்ரேலில் சிக்கித் தவித்து வருகின்றனர். ஆகவே, இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.
ஏற்கெனவே, கடந்த மே மாதம் சூடான் நாட்டில் இராணுவத்துக்கும், துணை இராணுவத்துக்கும் இடையே போர் மூண்டபோது அந்நாட்டில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்க ஆபரேஷன் காவேரி திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. அதேபோல, தற்போது இஸ்ரேலில் இருந்து இந்தியர்களை பாதுகாப்பாக மீட்பதற்காக, ஆபரேஷன் அஜய் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
இத்திட்டத்தின் மூலம் முதல்கட்டமாக இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட விமானம் 212 இந்தியர்களுடன் டெல்லி விமான நிலையத்தை நேற்று வந்தடைந்தது. இதைத் தொடர்ந்து, 235 பயணிகளுடன் 2-வது விமானம் இன்று காலை டெல்லி விமான நிலையத்தை வந்தடைந்தது. இவ்விமானத்தில் வந்த இந்தியர்கள், தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக, வந்தே மாதரம் கோஷம் எழுப்பினர். மேலும், தங்களை பாதுகாப்பாக மீட்டு வந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய பா.ஜ.க. அரசுக்கும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும், இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகத்துக்கும் நன்றி தெரிவித்தனர்.
இதுகுறித்து இஸ்ரேலில் இருந்து திரும்பிய இந்தியர் ஒருவர் கூறுகையில், “மத்திய அரசின் இந்த முயற்சியை நாங்கள் பாராட்டுகிறோம். போர் சூழ்ந்திருக்கும் இஸ்ரேல் நாட்டிலிருந்து எங்களை பாதுகாப்பாக அழைத்து வந்ததற்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இதற்காக, பாரதப் பிரதமர் மோடி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மத்திய மத்திய அரசுக்கு மிக்க நன்றி” என்று கூறினார்.
இஸ்ரேலில் இருந்து அழைத்து வரப்பட்ட இந்தியர்களை டெல்லி விமான நிலையத்தில் வரவேற்ற வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங், “ஆபரேஷன் அஜய் திட்டத்தின் மூலம் முதல்கட்டமாக 212 இந்தியர்கள் பத்திரமாக அழைத்து வரப்பட்டனர். தற்போது 2-வது கட்டமாக 235 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 135 பேர் மாணவர்கள். 2 பேர் கைக்குழந்தைகள். மேலும், இஸ்ரேலில் சுமார் 18,000 இந்திய குடிமக்கள் வசிக்கிறார்கள். இவர்களில் இந்தியாவுக்குத் திரும்பி வரத் தயாராக இருப்பவர்களை அழைத்து வர ஆபரேஷன் அஜய் திட்டம் தொடரும்” என்றார்.
முன்னதாக, இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “இஸ்ரேலின் டெல் அவிவில் இருந்து 235 இந்திய பிரஜைகளை ஏற்றிக்கொண்டு 2-வது விமானம் புறப்பட்டது” என்று தெரிவித்திருந்தார்.
இது ஒருபுறம் இருக்க, இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் இந்திய மக்களுக்கு உதவிகளை வழங்கி வருகிறது. மேலும், உதவி தேவைப்படும் இந்திய குடிமக்களுக்கு ஹெல்ப்லைன் ஒன்றையும் அமைத்திருக்கிறது. அதிகரித்து வரும் மோதல்களைக் கருத்தில் கொண்டு வெளியுறவுத்துறை அமைச்சகமும் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையை அமைத்திருக்கிறது. இந்தக் கட்டுப்பாட்டு அறை நிலைமையை கண்காணிக்கவும், தகவல் மற்றும் உதவியை வழங்கவும் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.