மகாளய அமாவாசையை முன்னிட்டு சுந்தர-சந்தன மகாலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் காப்பக வனப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி மலையில் பிரசித்தி பெற்ற சுந்தர சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது.
பஞ்ச பூதலிங்கத் தலம் என அழைக்கப்படும் இக்கோவிலுக்கு மகாளய அமாவாசையை முன்னிட்டு கடந்த 12ஆம் தேதி முதல் 4 நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதன்படி மகாளய அமாவாசை தினமான இன்று காலை 7 மணிக்கு பக்தர்கள் மலையேற வனத்துறையினர் அனுமதி அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து சிறுவர், சிறுமிகள், பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் ஆர்வத்துடன் சதுரகிரி மலையேறி சுந்தர சந்தன மகாலிங்க ஸ்வாமியை தரிசனம் செய்தனர்.
மலைப்பாதைகளில் உள்ள சங்கிலி பாறை, வழுக்குப் பாறை, பிலாவடி கருப்பசாமி கோவில் உள்ளிட்ட பகுதிகளில் வனத்துறையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் குறுகலான மலை பகுதியில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும் போலீசார் நியமிக்கப்பட்டு இருந்தனர்.
மகாளய அமாவாசையை முன்னிட்டு சுந்தர-சந்தன மகாலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. மதுரை, திருமங்கலம், விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.