கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி கொண்டிருக்கும் எம்பெருமான் ஆதி கேசவ பெருமானின் திருவடிகளை வட்டமிட்டு பரளியாறு ஓடுவதால் இந்த ஊா் திருவட்டாறு என்ற சிறப்பு பெயரில் அழைக்கப்படுகிறது. இப்படிச் சிறப்பு வாய்ந்த ஊரில், திருவட்டாறு பகுதியில் அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் அமைந்துள்ளது.
திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் மிகவும் பழைமையான வைணவக் திருக்கோயிலாகும். இது 108 வைணவத் திருத்தலங்களுள் 76 ஆவதாகப் போற்றப்படுகிறது. மேலும், இது 13 மலை நாட்டுத் திருத்தலங்களுள் ஒன்றாகவும் வணங்கப்படுகிறது.
ஆதிசேடனைப் படுக்கையாகக் கொண்டு அறிதுயிலில் ஆழ்ந்துள்ள பெருமாளின் திருமேனி 22 அடி நீளம் உடையது. இது 16,008 சாளக்கிராமக் கற்களைக் கொண்டு செய்யப்பட்ட சடுசக்கரை படிமமாகும். கருவறையில், திருமுகம், திருக்கரம், திருப்பாதம் எனும் 3 நிலைவாசல்கள் உள்ளன. இக்கோயிலின் பிரதான வாயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது.
இப்படிச் சிறப்பு வாய்ந்த திருவட்டாறு அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் பங்குனி மற்றும் ஐப்பசி மாதங்களில் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஐப்பசித் திருவிழா 14 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
காலையில் நிர்மாலியம், ஸ்ரீபூத பலியைத் தொடர்ந்து, திருக்கொடியேற்றப்படுகிறது. இரவில் சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வரும் நிகழ்வு நடைபெறுகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது.
இந்த திருக்கோவிலில் நுழையும் ஆண்கள் அனைவரும் இறைவனுக்கு மரியாதை தரும் வகையில் தங்கள் சட்டைகளைக் கழற்றிவிட்டு சுவாமி தரிசனம் செய்வது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.